Tuesday, August 21, 2007

ஜிவாசி

சிவாஜி - ஸ்ரீபதி பத்மநாபாவின் பார்வையில்

முன்னொரு காலத்தில் சிவாஜி ஆறுமுகம் என்றொரு வாலிபன் வாழ்ந்து வந்தான். ஏழைப் பெற்றோர்களுக்குப் பிறந்த அவன் தன் ஏழ்மையிலும் மிகவும் சிரமப்பட்டு படிப்பை முடித்து விட்டு பொருள் தேடி தூரதேசத்திற்குச் சென்று அங்கே இருநூறு கோடி வராகன்களுக்கும் மேல் திரவியம் சேர்த்துக் கொண்டு தன் தாய்நாட்டுக்குத் திரும்பி வருகிறான். பெரும் இவட்சியவாதியான அவனுக்கு இரண்டு மாபெரும் இலட்சியங்களிருந்தன. அவற்றில் ஒரு இலட்சியத்தை அவன் அடைந்த காதை வருமாறு:

மேலைநாட்டு நவநாகரிக யுவதிகளைக் கண்டு சலித்து வெறுத்துப் போன அவனுக்கு தமிழ்ப் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் இன்னும் விடாமல் கடைப்பிடித்துக்கொண்டிருக்கும் ஒரு மங்களமான யுவதியை மணந்து கொள்வது இலட்சியம். இதற்காக அவன் ஐந்து நட்சத்திர விடுதிகளைத் தாண்டிப் போய் கோவில் குளங்களில் அலைந்து திரிந்து தமிழ்ச்செல்வி என்ற அ,ம,நா,ப நிறைந்த ஒரு நங்கையைக் கண்டடைந்து, அவளுடன் பழகுவதற்காக குடும்பத்தோடு அவளின் பின்னால் அலைய, அவள் வசித்து வந்த தெருவாசிகளும் இவர்களுக்கு உதவ, அவள் மனமும் குடும்பத்தாரின் மனமும் கனிந்து திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்கும் வேளையிலே இந்த ஜாதகக்காரனைத் திருமணம் செய்தால் அவள் விதவையாகிவிடுவாள் என்று கணியன் கூறிவிட அவள் செய்வதறியாமல் திகைத்து நிற்க அவன் மின்சார ஊர்தியின் தண்டவாளத்தில் சென்று நின்றுவிட அவளும் மீண்டும் செய்வதறியாமல் தன் சிவப்பு மேலாடையை அவிழ்த்துக் காட்டி ஊர்தியை நிறுத்தச் செய்து அவனுடன் இணைகிறாள்.

நிற்க. அவனுடைய இன்னொரு இலட்சியம் ஏழ்மையில் பரிதவிக்கும் தன் தாய்த்திருநாட்டை வளம் கொழிக்கச் செய்வதாகும். இதற்காக, தான் சேர்த்து வைத்த திரவியத்தை எல்லாம் செலவிட்டு மருத்துவப் பல்கலைக்கழகத்தைத் துவங்குகிறான். அந்த ஊரில் மருத்துவத் துறையையும் கல்வித்துiறையையும் குத்தகைக்கு எடுத்து அரசாங்கத்தையே ஆட்டிப்படைக்கும் ஆதி என்னும் பெரும் செல்வந்தன் சிவாஜியின் வளர்ச்சியைத் தடுத்து அரசாங்கத்தின் மூலம் அவனுடைய ஆஸ்தியை முழுக்க செயலிழக்கச் செய்து அவனுக்கு ஒரு வராகன் பிச்சை அளித்து பிழைத்துக் கொள்ளச் சொல்கிறான். அந்த ஒரு வராகனை வைத்துக்கொண்டு அவன் ஆதியின் நூறு கோடி வராகன்கள் கறுப்புப் பணத்தை தந்திரமாக அபகரிக்கிறான். அப்போது அவனுக்கு ஒரு ஞானமுதயமாகிறது. ஒருவனிடம் மட்டுமே இவ்வளவு கறுப்புப் பணமிருந்தால் நாடு முழுக்க வாழும் செல்வந்தர்களிடம் எவ்வளவு கறுப்புப் பணமிருக்குமென்று. அந்தச் செல்வந்தர்களின் கணக்காளர்களையும் சாரதிகளையும் எப்படியோ கூட்டி வந்து ஒரு இடத்தில் அடைத்து வைத்து நான்கு அடியாட்களின் மூலம் அடித்து உதைத்து கறுப்புப் பணத்தின் இருப்பிடங்களைக் கண்டறிந்து கவர்ந்து அதைத் தூரதேசங்களுக்கு அனுப்பி தன் பெயரில் அன்பளிப்பாய் திருப்பி அனுப்பச் செய்து வெள்ளைப் பணமாக்கி அந்தப் பணத்தையெல்லாம் தன் தாய்த் திருநாட்டின் வளத்துக்காகப் பயன்படுத்துகிறான். இதைக் கண்டு பொறாத ஆதியும் மற்ற ... கபோதிகளும் சூழ்ச்சி செய்து தமிழ்ச்செல்வியைத் தூண்டி அவனைச் சிறையிலடைக்கிறார்கள். அங்கு உயிரையே இழந்து தான் முன் செய்த பலனால் மீண்டும் உயிர்த்தெழுந்து எதிரிகளின் முன் எம்ஜியாராக உருமாறி அவர்களை அழித்து தமிழ்ச்செல்வியுடன் இணைந்து மீண்டும் தாய்நாட்டுக்கு சேவைகள் செய்து சுபிட்சமாக வாழ்ந்து வரலாயினான்.

இப்படி ஒரு கதையை ரஜினி ஷங்கர் ஏவியெம் போன்ற பெயர்களில்லையென்றால் நீங்கள் துணிந்து திரையரங்கிற்குள் செல்வீர்களா?சாதாரணமாகவே ஷங்கரின் திரைப்படங்கள் என்றால் ஒரு அம்புலிமாமா கதையும் அதன் கூடவே இயைந்து வருகிற ஒரு சமூக விழிப்புணர்வு இழையும் பின்னிய திரைக்கதைகளாகத்தான் இருக்கும். என்றாலும் அதையெல்லாம் மறக்கடிக்கிற சுவாரஸ்யமான திரைக்கதையும் புத்திசாலித்தனமான காட்சியமைப்புகளும் அங்கங்கே தெறிக்கும் சில நுணுக்கங்களும் கொஞ்சம் ஓவர்டோஸாக இருந்தாலும் ரசிக்க வைக்கும் பிரம்மாண்டமும் அவரை ஒரு நல்ல படைப்பாளியாக (பாய்ஸ் தவிர) அடையாளம் காட்டியிருந்தன.

சிவாஜியில் ரஜினி இருப்பதால் இதையெல்லாம் எதிர்பார்க்கக்கூடாதா என்ன? தரைமட்ட நகைச்சுவைக் காட்சிகள்... அபத்தமான, பள்ளிச் சிறுவர்கள் பேசுவதைப் போன்ற வசனங்கள்...(என்னை ஏம்மா கறுப்பா பெத்தீங்க? வெள்ளையாப் பெத்தா அழுக்காயிடுவேன்னுதாம்பா.) ரஜினி ரசிகர்களே கூட வேண்டா வெறுப்பாய் வெறுமனே நகைச்சு வைக்கிறார்கள். தொலைக்காட்சிகளில் சிரிப்போ சிரிப்பு துணுக்குக் காட்சிகளுக்காகவா இவ்வளவு கோடி செலவு செய்து படமெடுக்கிறார்கள்?

அர்ஜுனுக்கும் பிரபுதேவாவுக்கும் கமல்ஹாசனுக்கும் எடுத்துக் கொண்ட சிரத்தையை ரஜினிக்கு எடுக்க வேண்டியதில்லை என்று ஷங்கருக்கு யார் சொல்லிக் கொடுத்தது? அவரே தயாரித்த நல்ல படங்களையும் ரஜினி ரசிகர்கள் பார்த்திருக்கிறார்கள்; அவர்களின் ரசனை இன்னும் உயரவேயில்லை என்று குறைத்து மதிப்பிடுவது சரியா?

சிறப்பான தொழில்நுட்ப வல்லுனர்களைத் துணைக்கு வைத்துக் கொண்டு கலக்கப் போவது யாரு ஸ்டைலில் சிவாஜியையும் எம்ஜியாரையும் கமல்ஹாசனையும் சமயங்களில் வடிவேலுவையும் இமிடேட் செய்ய வைத்து ரஜினியை கோவை குணாவுடன் ஒப்பிடும் அளவுக்கு தரம் தாழ்த்தியிருக்க வேண்டாம்.

ஒவ்வொரு காட்சிக்கும் எவ்வளவு செலவு செய்திருக்கிறார்கள் எவ்வளவு கடுமையாக உழைத்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. ஆனால் எல்லாம் எதற்காக?

எனக்குப் பிடித்தவை ட்ரைவ் இன் தியேட்டரின் கார்கள் மோதலும் உச்சகட்டக் காட்சிகளின் விறுவிறுப்பும் இறுதியில் சிவாஜி எம்ஜியாராகும் சுவாரஸ்யமும்தான். இது மட்டும் போதுமா ஒரு ஷங்கர்-ரஜினி-ஏவியெம் கூட்டணிக்கு?

சமூக விழிப்புணர்ச்சியைத் தூண்டுவதற்காக ஷங்கர் படங்கள் எடுக்கிறார்; எந்தப் படம் அதில் வெற்றி பெற்றது? அவருடைய படங்கள் பொழுதுபோக்குக்கானவை. அதை நல்ல முறையில் தந்தாலே ரசிகர்கள் திருப்தியடைவார்கள். ஷங்கர் படங்கள் சமூக விழிப்புணர்ச்சியைத் தூண்டுகிறதா என்று ரசிகனுக்கு கவலையில்லை; ஸ்ரேயாவின் விழி, புணர்ச்சியைத் தூண்டுகிறதா என்பதே அவன் கவலை.

இந்த பிளாக் மணி பிளாக் மணி என்று சொல்கிறார்களே, இதை யார் கண்டுபிடித்தது? யார் சீராட்டிப் பாராட்டி வளர்த்தது? அதை வொயிட் மணி ஆக்குவதற்கான தொழில் ரகசியத்தையும் சொல்லித் தந்து விடுகிறார்கள். பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விட்டு மீண்டும் பிள்ளையைக் கிள்ளிவிடுவதில் அவர்களுக்கு நிகர் அவர்களேதான். சாத்தான்கள்ள வேதம் ஓதுவது அவர்களின் புண்ணியத்துக்காகத்தான் என்பது ரசிகனுக்குத் தெரியாதா என்ன?

இந்தப் படத்திற்கான முதல் நாள் டிக்கெட்டுகள் சென்னையில் 1200 ரூ. வரை விற்றதாம். நான் சென்ற தியேட்டர் வாசலில் உடல் மெலிந்து கசங்கிய சட்டை லுங்கியுடன் ஒருவன் ‘ஜிவாசி... 500... ஜிவாசி... 500’ என்று அலைந்து கொண்டிருந்தான்.

பாமர ரசிகர்களின் வியர்வை நாற்றமடிக்கும் கறுப்புப் பணத்தை கவர்ந்து பெரும் பண முதலைகளுக்கு விநியோகிக்கும் விதத்தில் சிவாஜிக்குக் கிடைத்திருப்பது வெற்றியே.

செய்நேர்த்தி மிக்க தொழில்நுட்பக்கலைஞர்கள், ரஜினிகாந்தின் மாஸ், ஏவியெம்மின் பறக்கும் பணம் எல்லாமிருந்தும் ஷங்கரின் சிறுபிள்ளைத்தனமான திரைக்கதை சுஜாதாவின் சிறுபிள்ளைத்தனமான உரையாடல்.... படத்தின் உபதலைப்பில் ஒரு சிறு எழுத்துப்பிழையை யாரும் கவனிக்கவில்லை போலிருக்கிறது... சிவாஜி The BOSS அல்ல; BOYS!


(ஜூலை 2007, அம்ருதா மாத இதழ்)

4 comments:

ச.மனோகர் said...

'அர்ஜுனுக்கும் பிரபுதேவாவுக்கும் கமல்ஹாசனுக்கும் எடுத்துக் கொண்ட சிரத்தையை ரஜினிக்கு எடுக்க வேண்டியதில்லை என்று ஷங்கருக்கு யார் சொல்லிக் கொடுத்தது?'

இயக்குனர் சங்கர் ரஜினி ரசிகர்களை பற்றி என்ன நினைக்கிறார் என்பது இப்போது புரிந்துவிட்டது.

மு த் து க் கி ரு ஷ் ண ன் said...

தங்களின் எழுத்துக்களை படிக்கும் வாய்ப்புக்காக முதற்கண் நன்றிகள்..

சிவாஜியை பொருத்தவரை நீங்கள் குறிப்பிட்ட அனைத்தும் மறுக்க முடியாதவை...

ஷங்கர் சாருடைய மற்ற படங்களை பார்த்துவிட்டு வெளிவரும்போது மனம் ஏதோ பண்ணும்...

ஆனால் இப்படத்தில் அப்படிப்பட்ட உணர்வே இல்லை....

மிகப்பெரிய தலை கைக்கு வந்ததும் அதிகமாக தடுமாறி விட்டார் என்று நினைக்கிறேன்.....

நீங்கள் கூறியது போலவே அப்பட்டமான வசனங்கள், அமெச்சுரான காதல் காட்சிகள்(குறிப்பாக ஸ்ரேயா காதல் காட்சிகள்.)

Prasanna Rajan said...

நான் படித்த மிகச் சிறந்த சப்பைக்கட்டு விமர்சனம் இது. வணிகத் திரைப்படங்களுக்கு ஜால்ரா அடிக்கும் வெகுசன இதழ்களின் விமர்சனங்களை விட ஒரு படி மேலே உள்ளது. ஏதோ போகிற போக்கில் படத்தை பற்றிய குறைகள் இறுதியில்.க்ஷங்கரை ஒரு தேர்ந்த படைப்பாளி ரேன்சுக்கு பெருமை படுத்தி வீட்டீர்.க்ஷங்கர் ஒரு தேர்ந்த டெக்னீஸியன் மட்டுமே.சமூகச் செய்தி என்ற போர்வையில் சுஜாதாவும் க்ஷங்கரும் ஒவ்வொரு திரைப்படத்தில் கையாளும் நுன்னிய அரசியலை என்னவென்று சொல்வது. தயவு செய்து இனியும் இது போன்ற தனி மனித கதாநாயகத்தை போற்றி புகழும் விமர்சனங்கள் வேண்டாம்.

சிவசுப்பிரமணியன் said...

ஒரு உச்ச கட்ட கதாநாயகனை சாதரணமா ஒரு நகைச்சுவை நடிகனாக (கொடுமை வேற வார்த்தை கிடைக்கலை)மாற்றிய பெருமை சங்கருக்கு சேரட்டும். ரஜினியின் பெயரை மட்டும் நம்பி கதையில் கோட்டை (படத்துல அவ்வளோ ஓட்டை)விட்டார். நான் நல்லா கொட்டாவி விட்டேன்.