Tuesday, November 20, 2007

வரிப்புலிகள் - ஸ்ரீபதி பத்மநாபா

(தமிழ் மற்றும் மலையாள திரைப்படப்பாடல்களை முன்வைத்து)

திரைப்படங்கள் காட்சி ஊடகங்கள். நல்ல வசனம் உள்ள திரைப்படம், நல்ல பாடல் உள்ள திரைப்படம் என்று சொல்பவர்கள் நல்ல திரைப்படத்தைப் பார்க்கவில்லை என்று அர்த்தம். நம் மூதாதையர் வழியாக நம் திரைப் படங்களிலும் பாடல் என்ற ஒன்று நிகழ்ந்துவிட்டது. எதார்த்தமான இந்தியத் திரைப்படங்களில் கூட பாடலும் ஒரு பொருட்டாகத்தான் இருக்கிறது. ஒரு திரைப்படத்துக்கு பாடல் தேவையில்லை அல்லது ஒரு திரைப்படத்துக்கு பாடல் என்பது ஒரு மாந்திரீக யதார்த்தவாதப் பரிமாணத்தைக் கொடுக்கிறது என்கிற சாகித்திய விசாரங்களை எல்லாம் விட்டுவிடுவோம்.

உங்களுக்கும் எனக்கும் தினமும் காலையில் எழுந்தவுடன் ஏதோவொரு பாட்டு அனிச்சையாக மனதில் தோன்றி மதியம் வரை விடாது வாய்க்குள் சுழன்று கொண்டிருக்கும். நேற்று காலை எழுந்ததிலிருந்து ஒரு பாடல் வாய்க்குள் சுழன்று கொண்டிருந்தது:
‘கொஞ்சும் புறாவே, நெஞ்சோடு நெஞ்சம், ஜகமெங்கணும் உறவாடிடும் ஜாலமிதேதோ...’
இந்தப் பாடல் எப்போது எனக்குள் புகுந்தது என்று தெரியவில்லை. மதியம் வரை அதை நாக்கிலிருந்து பிடுங்கி வெளியேற்ற முயன்றும் முடியவில்லை. மதியத்துக்குப் பிறகு தானாகவே வெளியேறி விட்டது.

இப்படியாக திரைப்படப்பாடல் என்பது நம் அன்றாட வாழ்வின் அனிச்சைச் செயலாகி விட்ட நிலையில், இந்த எழுத்துரையும் திரைப்படப் பாடல்கள் பற்றியதாகவே இருக்கட்டுமே. திரைப்படப் பாடல்களின் இசை குறித்து நிறைய எழுதப்பட்டுவிட்ட நிலையில் வரிகள் குறித்ததான என்னுடைய பார்வை இந்த எழுத்து என்பதை தலைப்பைப் பார்த்தவுடனேயே புரிந்துகொண்டிருப்பீர்கள். (இந்தத் தலைப்பைப் படித்துவிட்டு நண்பரொருவர் சொன்னார்: நம் பாடலாசிரியர்களுக்கு இதை ஒரு பட்டமாகவே வழங்கலாமே; வரிப்புலி வைரமுத்து, வரிப்புலி வாலி.... அடடா! கேட்கவே எவ்வளவு லயமாக இருக்கிறது!)

ஊர் மக்கள் உறங்கி விட்டார்கள், ஊதைக் காற்று அடித்து விட்டது என்று பல்வேறு காரணங்களை அடுக்கி, ஆகவே, மாமா, உடனே, வா, உடலுறவு கொள்ளலாம் என்னும் சுயமைதுனத்துக்கு உதவும் பாடல்களையும் விட்டுவிடுவோம். திரைப்படப் பாடல்கள் எவ்வளவு ஆபாசமாய் இருக்கின்றன, ஆங்கிலக் கலப்பு எவ்வளவு சதமானம் இருக்கிறது என்பதைப் பற்றியெல்லாம் தோழர் பாமரன் நிறைய எழுதிச் சலித்து விட்டார்.

துரதிஷ்டவசமாக அல்லது அதற்கு எதிர்மறையாக, இரண்டு மொழிகள், இரண்டு கலாச்சாரங்களில் வளர்ந்தவன் நான். (மலையாளக் கரையோரம் என்னை ‘பாண்டி’ என்று அழைக்கிறார்கள்; தமிழ் கூறும் நல்லுலகத்தில் என்னை ‘கஞ்சி’ என்று அழைக்கிறார்கள்.) கள்ளப் பாளையத்தின் கருவேலங் காடுகளிலும் கண்ணூரின் முந்திரித் தோப்புகளிலும் மாறி மாறி வளர்ந்ததால் நினைவுகளில் இருமொழிப் பாடல்கள் உள்ள மிருகமானேன் நான்.
பிஞ்சுப்பருவத்தில் பாடல்கள் என்பவை E=MC2 என்பதுபோல் தாளலயத்தில் மனதில் பதிந்துபோன அர்த்தம் தெரியா சூத்திரங்கள் மட்டுமே. ஆனால், பதின்பருவங்களிலேயே பாடல் வரிகளின் அர்த்தத்தைத் புரிந்துகொள்ளும் அளவு பேரிளம்பையன் ஆனபோதுதான் வரிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொண்டேன்.

நான் அர்த்தம் புரிந்து ரசித்த முதல் பாடல் என்று இதைச் சொல்லலாம்: தமிழ்நாட்டில் அவளுடைய Braவுகள் என்று பரவலாக அறியப்பட்ட அவளுடெ ராவுகள் படத்தில் ஒரு பாடல். ஒரு பாலியல் தொழிலாளியின் இரவுகளைப் பற்றிய பாடல். அதுவரை வெறுமனே நாக்குக்குள் சுழன்று கொண்டிருந்த அந்தப் பாடல் அர்த்தம் புரிந்த பிறகு மூளைக்குள் ஒரு துளையைப் போட்டு விட்டது.

‘நிலவின் கிரணங்கள் ஒளி வீசுவதில்லை
இரவின் விண்மீன்கள் கண் சிமிட்டுவதில்லை
மதன உற்சவங்களுக்கு வண்ண மாலைகள் இட்டு இட்டு
மனமும் மார்பும் பாலைவனமானது
நித்திரையின் ஊனங்களன்றோ
என்றும் அவளது இரவுகள்...’

அன்றிலிருந்து வரிகளைப் பிடித்துக்கொண்டேன்.

மருதகாசி, கல்யாணசுந்தரம், கண்ணதாசன், வாலி, வைரமுத்து, முத்துக்குமார், தாமரை.... வயலார் ராமவர்மா, பிச்சு திருமலா, ஓ.என்.வி, ஸ்ரீகுமாரன் தம்பி, கைதப்புறம் தாமோதரன் நம்பூதிரி, ரமேசன் நாயர், கிரீஷ் புத்தஞ்சேரி, வயலார் சரத்சந்திர வர்மா.... என்று இவர்களின் வரி விழுதுகளில் பிடித்துக் கொண்டு ஊஞ்சலாடிப் பயணமாகும் வனங்கள் ரம்மியமானவை.

மேற்கண்ட பாடலை எழுதியவர் பிச்சு திருமலா.

மலையாளத்தின் கண்ணதாசன் என்று கருதப்படும் வயலார் ராமவர்மா என் பதின்பருவங்களில் அதிர்ச்சிகளைத் தந்தவர்.

காதலி வேறொருவனுடன் திருமணமாகிச் செல்கிறாள். அவளுக்காகக் காதலன் பாடும் பாடல்:
‘சுமங்கலீ... நீ நினைத்துக் கொள்வாயா/ கனவிலாவது இந்த கானத்தை...’ என்று தொடஙகும் அந்தப் பாடலின் அனுபல்லவி இப்படிப் போகிறது:

‘பிரிந்து போகும் உன்னால் இனி இந்தக் கதையை மறக்கத்தானே முடியும்
நிறைந்த மார்பின் முதல் நகக் குறியை மறைக்கத்தானே முடியும்
கூந்தலால் மறைக்கத்தானே முடியும்!’

இதற்கு இணையான தமிழ்ப் பாடலும் ஒன்று உள்ளது. இதே சூழ்நிலைக்கு வைரமுத்து எழுதிய அந்தப் பாடலும் கவனிக்கத்தக்கது. திருடா திருடா படத்தில் வரும் ‘ராசாத்தி என் உசிரு என்னுதில்ல...’ கிராமத்துக் காதலின் ஒரு மீஅண்மைக் காட்சியை (Extreme Close/up) வரிகளிலேயே காணலாம்.

‘அந்தக் கழுத்துத் தேமலையும் காதோர மச்சத்தையும் பார்ப்பதெப்போ...’

வைரமுத்துவைப் பற்றிச் சொல்லும் போதெல்லாம் என் மனதில் உடனே நினைவுக்கு வருபவர் எனக்கு பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடம் எடுத்த திரு. அரங்கநாதன்தான். இலக்கணம் கசந்து விடக்கூடாது என்பதற்காக அப்போதைய திரைப்படப் பாடல்களின் பாட்டுப் புத்தகங்களை வாங்கிப் படித்து, பாடல்கள் மூலமாக அணிகளையும் வினைகளையும் விளக்குவார் அவர். கூடவே அந்தப் பாடல்களையும் திறனாய்வு செய்து சொல்லுவார். மிக உற்சாகமான வகுப்பறை அவருடையது. பிறிது மொழிதலணியை எங்களுக்குப் புரியவைக்க அவர் வகுப்பெடுத்த விதம் வருமாறு:

டேய் திருப்பதி அந்த இந்தப் படத்தில ஒரு பாட்டு வந்திருக்கில்ல, அதப் பாடு.

எந்தப் படத்திலீங்க ஐயா?

அதாண்டா நம்ம மைக் மோகர் நடிச்சிருக்காருல்ல? ஈரமான...?

இளமைக் காலங்களாய்யா?

அந்தக் கெரகம்தான். பாடு.

நான் தொண்டையை சரி செய்துகொண்டேன்.

பெரிய ஏசுதாசுன்னு நெனப்பாடா? பாட்டு வகுப்பா எடுத்துட்டிருக்கேன்? அட சும்மா பாடுறா...

‘ஈரமான ரோஜாவே... என்னைப் பார்த்து மூடாதே...’ என்று பாட ஆரம்பித்தேன். ‘தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து, என்னோடு நீ பாடி வா சிந்து...’ என்ற வரிகள் முடிந்தபோது நிறுத்தச் சொன்னார்.

அதென்னடாது தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து, என்னோடு நீ பாடி வா சிந்து.. ரெண்டு வரிக்கும் என்னடா சம்மந்தம்?

தெரீலீங்கய்யா...

ழெழீழீழ்ழழ்ழா... அப்பறம் என்னத்தடா பாட்டைக் கேக்கறீங்க! அதாவது...
காத்துள்ள பந்து தண்ணிக்குள்ள மூழ்காது, அது மாதிரி அறிவுள்ள கதாநாயகியா இருந்தா கண்ணீர்ல மூழ்கி வருத்தப்படக் கூடாது. அதனால பிரச்னையெல்லாம் மறந்துட்டு எங்கூட வந்து டூயட் பாடுங்கறாரு மைக் மோகரு. புரிஞ்சுதா? இப்புடி உண்மையச் சொல்லாம உவமையை மட்டும் சொல்லிப் புரிய வக்கிறதுதான் பிறிதுமொழிதலணி, புரிஞ்சுதா?

இன்று வரை எனக்கு பிறிது மொழிதலணி மறக்கவில்லை.

விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவைப் பற்றி மணிக்கணக்கில் விவரிப்பார் அரங்கநாதர். உண்மையான காதல் என்றால் என்னவென்று இரண்டு வரிகளில் சொல்லிவிடலாம் என்பார்: வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன்; இலையுதிர் காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன்.

அன்று முதல் இன்று வரை பாடல்வரிகளில் வைரமுத்துவின் கவிதை ரசனை ரசம் மிகுந்ததாகவே இருக்கிறது. சமீபத்தில் அவர் எழுதியதில் இந்த வரிகள் எனக்குப் பிடித்தவை :
லட்சம் பல லட்சம் என்று தாய்மொழியில் சொல்லிருக்க ஒத்தைச் சொல்லு சிக்கவில்லை எதனாலே?
பந்தி வச்ச வீட்டுக்காரி பாத்திரத்தைக் கழுவிட்டு பட்டினியாக் கெடப்பாளே அதுபோல... (நெஞ்சாங்கூட்டில்)

அன்றெல்லாம் அரங்கநாதருக்கு ஒரு ஐம்பது வயது இருக்கும். கண்ணதாசனை ரசிக்கிற அதே மனதால் வாலியையும் வைரமுத்துவையும் ரசிக்கிறவராய் இருந்தார் அவர். கண்ணதாசனு டையவை என்று நான் நினைத்துக்கொண்டிருந்த பல வரிகளை அவை வாலியின் வரிகள் என்று பதைபதைத்துப்போய் திருத்துவார். மாதவிப் பொன்மயிலாள் கண்ணதாசன எழுதியது என்றுதான் நினைத்திருந்தேன். அட மகா பாதகத் திருப்பதீ... அது வாலியோடதுடா... என்று கொந்தளித்துப்போவார். அங்கீகாரம் இடம்பெயர்வதில் அவருக்கு என்றுமே உடன்பாடு இருந்ததில்லை.

அவரிடம் ‘ஒரு பெரிய இவனாட்டம்’ கண்ணதாசன் தவறு செய்து விட்டார் என்று சுட்டிக் காட்டப் போய் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டேன்.

ஐயா கண்ணதாசன் ஒரு பாட்டுல தப்பா எழுதியிருக்காருங்கய்யா.

டேய்.டேய்... அடங்குடா... கண்ணதாசனைக் குத்தம் சொல்ற அளவு வந்துட்டியா... பெரிய இவனா நீ.

நீங்க கத்துக் குடுத்த இலக்கணந்தாங்கய்யா....

பார்றா... சரி சொல்லு.

ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் அந்த உறவுக்கு பெயர் என்ன?

காதல்.

நீங்க எனக்கு கைக் கிளைன்னுதானே சொல்லிக் கொடுத்தீங்க.

அரங்கநாதர் முறைத்தார்.

ஒருத்தி மடடும் ஒருவனை நினைத்தால்தான் கைக்கிளை. அவனும் அவளை நினைக்கிறான்கறது அடுத்த வரியிலேயே சூசகமா தெரியுதுல்ல. அதப் பாக்கலியா அறிவுக் கொழுந்து... அந்த ஒருவன் ஒருத்தியை மணந்து கொண்டால்....

நான் வெளிறிய முகத்துடன் வெளியேறினேன்.

ற்கால மலையாளப் பாடலாசிரியர்களில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர் கைதப்புறம் தாமோதரன் நம்பூதிரி. முக்கியமான இசைக் கலைஞரும் கூட. ‘குஞ்ஞிக் கிடாவின்னு நல்கான் அம்ம நெஞ்சில் பாலாழி ஏந்தி’ எழுதியவரும் அவர்தான்; ‘லஜ்ஜாவதியே நின்டே கள்ளக் கடக் கண்ணில்’ எழுதியவரும் அவர்தான்.

என்னுடைய ‘வண்ணங்கள்’ எனும் இசை ஆல்பத்தில் அவருடைய அனுமதியுடன் நான் சேர்த்துக் கொண்ட வரி இது:

பசிக்கின்ற போது அமுதினை ஊட்ட பாற்கடல் நெஞ்சில் ஏந்திய தாயே...

அவருடன் உரையாடிக் கொண்டிருப்பது என்பது ஒரு அற்புதமான அனுபவம். ஒரே மனிதருக்குள்ளிருந்து சங்கீதமும் சாகித்தியமும் ஒரு சேர பிரவாகமாய் கிளம்புவது அனுபவித்து ரசிக்க வேண்டிய விஷயம். அவருக்கோ தமிழ் பாடலாசிரியர்களைப் பார்த்து ஆச்சர்யம். கண்ணதாசன் முதல் முத்துக்குமார் வரை அலசுவார்.

அவர் மலையாளத்தில் எழுதிய ‘லஜ்ஜாவதியே நின்டே கள்ளக் கடக் கண்ணில்’ என்ற பாடலை தமிழில் முத்துக்குமார் எழுதினார். கைதப்புறத்துக்கு தமிழ்ப் பாடலை விளக்கினேன். ‘லஜ்ஜாவதியே என்னை அசத்துற ரதியே’ என்பதற்கு பதிலாக ‘லஜ்ஜாவதியே உன் கள்ளுக்கடைக் கண்கள்’ என்று ஆரம்பித்திருக்கலாமே என்றார். ஆனாலும் மற்ற வரிகளையெல்லாம் மிகவும் ரசித்தார். குறிப்பாக ‘கட்ட வண்டி மையினால் கட்டபொம்மன் மீசையை கண்ணே நீ வரைந்து விட்டு ராஜராஜன் என்றதும்’ மிக அருமை என்றார்.

அவரே இசையமைத்து எழுதி ஜேசுதாஸ் பாடிய மறக்க முடியாத பாடல் ‘தேசாடனம்’ என்ற திரைப்படத்தில் இருக்கிறது. பெற்றோர்களுடன், தாத்தாவுடன், தோழர்களுடன் விளையாடித் திரிந்த மகனை மடத்திலிருந்து வந்து அடுத்த ‘பெரியவாளாக’ ஆக்குவதற்கு தேர்வு செய்கிறார்கள். பெரும் மனப் போராட்டங்களுக்கிடையே அவனை மடத்தில் விட்டு விட்டு திரும்பும் தகப்பனின் உணர்வுகளாக ஒலிக்கும் ‘களி வீடுறங்கியல்லோ...’ என்ற அந்தப் பாடலின் அதே சந்தத்தில் வரிகளின் என்னுடைய தமிழ் வடிவம் இது:

விளையாட்டு வீடுறங்க
விளையாட்டுப் பேச்சுறங்க
ஒரு பார்வை பார்ப்பதற்கே என்னுள்ளம் தானும் ஏங்க
அலைகின்ற அலையே, கடலே
சிரிக்கின்ற பூக்களே
அறிவீர்களா என் நெஞ்சின்
அடங்காத ஜென்ம துக்கம்?

தாலாட்டு பாடினால்தான் கண் மூடுவான்
நான் பொன் முத்தம் சிந்தினால்தான் கண் மலர்வான்
கதை சொல்லிக் கேட்டால்தான் அமுதுண்ணுவான்
என் கைவிரல் நுனியைப் பிடித்தே நடைபோடுவான்... அவன்
நடை போடுவான்...

கண்களில் நீர் மல்க அவர் பாடுவதைக் கேட்பது பரமசுகம், அவரோ... தமிழ் பாடலாசிரியர்கள் போல அவ்வளவு எளிமையா எங்களுக்கு எழுத வராது.
நீ காற்று, நான் மரம், என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்... வைரமுத்து எவ்வளவு எளிமையா அழகா எழுதறார். மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்கிற கீதை வாசகத்தை வைத்துக்கொண்டு எவ்வளவு அழகாக, காலங்களில் அவள் வசந்தம்னு காலத்தால் அழியாத ஒரு காதல் பாடலை எழுதுனார் உங்க கண்ணதாசன், என்றெல்லாம் சிலாகித்துப் பேசுவார்.

நானும் அதை யோசிப்பதுண்டு - மலையாளப் பாடல் வரிகளின் பாண்டித்தியத்தைப் பற்றி. சமஸ்கிருத அகராதி இருந்தால்தான் பல வார்த்தைகளின் அர்த்தம் புரியும். பாடலகள் பெரும்பாலும் பண்டிதர்களுக்கே என்ற நிலைமை இன்னும் அங்கே இருக்கிறது. விளிம்பு நிலை மனிதர்களுக்கான, அவர்களுடைய எளிமையான மொழியைப் பாடுகிற பாடல்கள் இல்லை என்றே சொல்லலாம்.

மலையாளக் கரையோர மீனவன்கூட, கடலின் அக்கரைக்குச் செல்பவர்களே, பதினாலாம் இரவின் பாற்கடல் அலையின் கடல்கன்னிகள் உதிர்க்கும் மாணிக்கத்தைக் கொண்டு வருவீர்களா என்று ஒரு ஃபேன்டஸி கனவைத்தான் பாடுகிறான். தமிழ் மீனவனோ, வாளை மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் திமிங்கிலம் தலைமையில் நடக்கும் எளிமையான காதல் திருமணத்தை தன் எளிமையான மொழியில் பாடுகிறான். தமிழின் மிக முக்கியமான அம்சம் சாதாரண மக்களின் பாடல்கள்தான். அதிலும் கானாப் பாடல்கள் தரும் மனவெழுச்சி வார்த்தைகளில் அடக்க முடியாதது. கானாப் பாட்டெல்லாம் ஒரு பாட்டா என்று முகம் சுளிக்கும் பண்டிதர்களுக்கு நேராக நாமும் முகத்தைச் சுளிக்கத்தான் வேண்டியிருக்கிறது. காதல் காதல் காதல், காதல் போயின் சாதல் என்று பாரதி எழுதினால்தான் இலக்கியமா? டாவு டாவு டாவுடா, டாவில்லாட்டி டையிடா என்பது சாதாரண மனிதனின் இலக்கியம். அதுதான் உண்மையான இலக்கியமும்கூட.

வாலியின் வாலிபம் இப்போதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் ஒரு விஷயம். மாதவிப் பொன்மயிலாளுக்கு முன்னமே தொடங்கி அப்பனென்றும் அம்மையென்றும் ஆணும் பெண்ணும் கொட்டி வைத்த குப்பையாக வந்த உடம்பில் தொடர்ந்து நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் வரைக்கும் அவருடைய இளமை இனிமையானது. இந்த வயதிலும் அவர் எழுதிய நியூயார்க் நகரம் சமீபத்தில் வந்தவற்றில் மிக அழகான பல்லவி:

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்ததே
பனியும் படர்ந்ததே
கப்பல் இறங்கியே காற்றும் கரையில் அலைந்ததே
நான்கு கண்ணாடிச் சுவர்களுக்குள்ளே நானும் மெழுகுவர்த்தியும்!
தனிமை தனிமை ஓ!
கொடுமை கொடுமை ஓ!

மிழ்ப் பாடல் வரிகளின் பரிமாணத்தை மாற்றியவர் என்று முத்துக்குமாரைச் சொல்லலாம். நவீன கவிதைக்கு நெருக்கமானதாகவும் ஜென் கவிதைகளின் பாதிப்புடனும் ஹைக்கூபாணியிலும் பல பரீட்சார்த்த முயற்சிகளை பாடல் வரிகளில் அவர் செய்திருக்கிறார். மிக சாதாரணமான, இளைஞர்களின் கேலிப் பாடலான ‘தேரடி வீதியில்’ பாடலை எடுத்துக் கொண்டால் கூட, மூன்று மூன்று வரிகளின் தொகுப்பாக ஹைக்கூவைப் போல் எழுதியிருப்பார். ‘தெரிஞ்சுக்கோ’ என்ற வார்த்தையை நீக்கிவிட்டுப் பாருங்கள்...

தேரடிவீதியில்
தேவதை வந்தா
திருவிழா,

அய்யனாரைத்தான்
ஆடு கும்பிட்டா
சைவம் ஆயிட்டாரு

அய்யரு பொண்ணு
மீன் வாங்க வந்தா
லவ் மேரேஜ்

கோயிலுக்குள்ள
காதலைச் சொல்லு
செருப்பிருக்காது...

கண்ணதாசனின் ‘நந்தா நீ என் நிலா நிலா...’ பாடலுக்குப் பிறகு தமிழின் மிக நீண்ட பல்லவியை எழுதியவர் முத்துக்குமார்தான் என்று நினைக்கிறேன். மிக நீண்ட அழகான பல்லவி அது:

கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒரு முகம் மறைய மறுமுகம் தெரிய
கண்ணாடி இதயமில்லை
கடல் கை மூடி மறைவதில்லை
காற்றில் இலைகள் பறந்த பிறகும்
கிளையின் தழும்புகள் அழிவதில்லை
காயம் நூறு கண்ட பிறகும்
உன்னை உள்மனம் மறப்பதில்லை
ஒரு முறைதான் பெண் பார்ப்பதனால்
வருகிற வலி அவள் அறிவதில்லை
கனவினிலும் தினம் நினைவினிலும்
கரைகிற ஆண் மனம் புரிவதில்லை.

நான் எழுதிய ‘வண்ணங்கள்’ இசைத்தொகுப்பில் சில வரிகள்:

மழை நின்றபின்னே மரம் மேகமாகும்
நீ சென்ற பின்னே உன் நினைவே மரமாகும்...

இதே போல ‘காதல்’ படத்தில் முத்துக்குமாரின் வரிகளைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன். ‘தொட்டுத் தொட்டு என்னை வெற்றுக் களிமண்ணை சிற்பமாக யார் செய்ததோ’ பாடலில் வரும் வரிகள்:

முதல் முறை உன்னைப்
பார்த்தது எங்கே
மனதும் தேடும்
மழை நின்ற பின்னும்
மரக்கிளை உள்ளே
மெதுவாய்த் தூறும்...

மனிதர் ஆயிரக்கணக்கில் காதல் வரிகளை எழுதித் தள்ளினாலும் ஒவ்வொரு வரியும் தனித்தன்மையோடு இருப்பதுதான் அவருடைய தனித்தன்மை.

ரிகளின் மீதான பித்து ஒரு காலத்தில் முற்றிப் போயிருந்தது எனக்கு. எந்த எழுத்தைச் சொன்னாலும் ஒரு பாடல் சொல்வது, எந்த வார்த்தையைச் சொன்னாலும் ஒரு பாடல் சொல்வது என்று ஆரம்பித்து நண்பர்களுடன் போட்டி போட்டிருந்த கல்லூரிக் காலத்தில் ஒரு கட்டத்தில் இப்படி ஒரு பாட்டு உருவாகிவிட்டிருந்தது. முடிந்தால் நீங்களும் பாடிப் பார்க்கலாம்:

அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா சொல்லித் தந்த வானம் அருகில் ஒரு வானம் தரையில் வந்த மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு மின்னல் வெட்டட்டும் பாட்டுப் பாட வா பார்த்துப் பேச வா பாடம் சொல்லவா பறந்து செல்ல வா பால் நிலவு காய்ந்ததே பார் முழுதும் ஓய்ந்ததே ஏன் ஏன் ஏன் ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன் ஏன் ஏன் ஏன் பல எண்ணத்தில் நீந்துகின்றேன் ஏன் ஒரு கிண்ணத்தில் தேன் வடித்து கைகளில் ஏந்துகின்றேன் எண்ணத்தில் போதை வர எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள் இங்கேதான் கண்டேன் உன் வண்ணங்கள் என் வாழ்க்கை வானிலே தேனிலா ஆடுதே பாடுதே வானம்பாடி ஆகலாமா மேகமே மேகமே பால்நிலா தேயுதே ....

இப்படி ஒரு மணி நேரத்துக்கு மேல் போய்க் கொண்டிருக்கும் இந்தப் பாடல்.

மீண்டும் மலையாளத்துக்கு வருவோம்.ஆழமும் செறிவும் மிகுந்த பன்னூறு வரிகள் இன்னும் மனதுக்குள் சிற்றலையாகப் பரவிக் கொண்டிருக்கின்றன. எல்லாவற்றையும் எழுத இடமில்லை. சில வரிகள் மட்டும்:

வாழ்வமுதத்தின் மையம் மதுரமானது (கைதப்புறம்)

பலா இலைப் பாத்திரங்களில் பொம்மைக்குப் பால் கொடுக்கும் குழந்தையாய் மீண்டும் என் அருகில் வந்துநில் (ஓ.என்.வி.)

மீண்டும் மீண்டும் யாரோ கனாவின் படி ஏறி வருகின்ற காலோசைகள்/ மீண்டும் மீண்டும் யாரோ நிலாவில் புல்லாங்குழல் ஊதும் தேனோசைகள் (கிரீஷ் புத்தஞ்சேரி)

ஒரு நிமிடம் தா உனக்குள் கரைய
ஒரு யுகம் தா உன்னை அறிய (சத்யன் அந்திக்காடு)

கண்ணாடி முதன்முதலாய் என்
வெளித் தோற்றத்தைக் கவர்ந்து கொண்டது
பாடகனே... உன் குரல் என்
உள்மனதைக் கவர்ந்து கொண்டது. (கைதப்புறம்)

விரலில் இருந்து வழுக்கி விழுந்தது
விரகம் நிறைந்த ஓர் ஆதி தாளம் (பிச்சு திருமலா)

இவ்வளவு செழுமையும் செறிவும் நிறைந்த மலையாளப் பாடல்களுக்கு ஏன் ஒரு முறை கூட தேசிய விருது கிடைக்கவில்லை என்பது புதிர்தான். பல்லவியின் முதல் வரியிலேயே ஒருமை பன்மையில் கூட இலக்கணப் பிழைகளோடு எழுதி தேசிய விருது ‘வாங்கும்’ அளவுக்கு பா...வம் மலையாள வரிப்புலிகளுக்கு வித்தகம் இல்லை போலும்!

(அம்ருதா மாத இதழ், டிசம்பர் 2007)

Thursday, August 23, 2007

பூஜ்யம்


(1997-ல் வெளிவந்த என்னுடைய ‘பூஜ்யம்’ என்ற கவிதைத் தொகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில கவிதைகள் மட்டும் ...)

வாசனை

கவிதையின் வாசனை குறித்து
சில சங்கற்பங்கள் இருந்ததெனக்கு.
சிறு வயசில் ரோட்டோர மணல்மேட்டில்
ட்ராயர் மட்டும் போட்ட ட்ரைவராய்
ஓட்டிய செங்கல் பஸ்
தானே பாதை கிழித்து மலை ஏறுகையில்
முந்தின இரவு யாரோ பெய்து மூடிவைத்த
மூத்திரத்தின் ஈரத்தையும் கிளறிவிட்டு ஓடி நிற்க
அந்த மூத்திர வாசனை இதை எழுதுகையில்
கிளர்ந்தெழும் நாசியில்.

ஏதோ ஓர் உதயத்தில் கேஎஸ்ஆர்டிசி பஸ்ஸில்
உறக்கத்திலிருந்து விழித்து
குந்நங்குளம் கடப்பதை உணர்கையில்
முன்சீட்டு பர்தா பெண்ணின்

துபாய் சென்ட் வாசனை இதை எழுதுகையில்
முல்லைப்பூவாய் மலரும்.
இப்படியாக,
இந்த உதாரணக் கவிதைக்கே
மூத்திர வாசனையா முல்லையின் வாசனையா
என உணர முடியாமல்
கவிதையின் வாசனைச் சங்கற்பங்கள் குறித்ததான
ஒரு சந்தேகம் மனதில் எழ,
பொது நூலகத்தின்
புத்தகஅடுக்குகளின் இடுக்குகளிலிருந்து
கிளம்பிய அந்த வாசனை
என் சந்தேகம் தீர்த்தது.


ஆறுதல் பரிசு

எறும்பு தின்னிகள் மிகவும் சாதுவானவை.
ரொம்ப நல்லவை.

பசிக்கிற நேரம்
கொஞ்சம் எறும்புகளை மட்டும் விழுங்கி
அவை பாட்டுக்கு ஊர்ந்து கொண்டிருக்கும்.

எப்பொழுதாவது முட்டையும்
கொஞ்சம் பாலும்
கிடைத்தால் மிக உசிதம்.

முகத்தின் அருகே மெதுவாய் நகரும்
நிலமே உலகம்.
அவ்வப்போது மூக்கில் கொஞ்சம் மண்

ஒட்டிக்கொள்ளும்.

அதனாலென்ன, பரவாயில்லை.
பதிக்கிற சிறு காற்சுவடுகளை
திரும்பிப் பார்ப்பது இல்லை.
அடுத்து வைக்கப் போகும் சுவட்டை

எண்ணிப் பார்ப்பதும் இல்லை.

எனக்கு உங்களைப் பிடித்திருக்கிறது
என்றவளே,
என்னைப் போலவே ஒரு எறும்பு தின்னியைப்
பரிசாய்த் தருகிறேன்.
படுக்கைக்கருகில் வைத்துக்கொள்.


காற்று

சந்தோஷ துக்க மனநிலைக்கொப்ப
உருவம் மாறும் முகிற்பஞ்சு.
(ஒரு சமயம் இந்திரா காந்தி கூட
மிதந்து கொண்டிருந்ததாய் ஞாபகம்)
அப்படியொன்றும் ஆழமில்லை
அடுத்தவர் மனது
- ஆணாகிலும் பெண்ணாகிலும்.
எனவே உன் மனநிலைக்கொப்பவும்
உருவம் மாறும் முகிற்பஞ்சு.
அந்தப் பொட்டல் வெளியில்
நாம் நின்றிருக்கையில்
காமத்தைக் கிளறிவிட்டுப்போன குளிர்காற்று
ழையை மலையாளத்துக்குக் கடத்தியது.
முகில்களுக்குப் பாவம் எலும்பும்
தசைகளுமில்லை.
நம் முன்
வேறோர் உருவத்தைக் காட்டிவிட்டு
நகர்ந்து கொண்டிருக்கின்றன.
முத்தத்திலோ முயங்குதலிலோ
காமம் தீர்ந்து விடுகிறதா என்று கேட்டாய்.
பின், கையை விடுவித்துக் கொண்டு நகர்ந்தாய்.
நெடுந்தூரம் சென்று திரும்பி நின்று கூவினாய்:
‘காத்திரு. ஒரு நாள் நானும் அகப்படுவேன்.’
இந்த நகரத்தின் இரைச்சலினூடே
நுழைந்து ஊர்ந்து போகையில்
இன்றும் சிலசமயம் நான்
வானத்தைப் பார்ப்பதுண்டு.


கனாவெளியில்

கனவு ஒரு மதுக்கோப்பை.
அதன் நுனியில் ததும்பி நிற்கும்
இன்னும் வழியாமல் என் கருணை.

கனவு ஒரு சமுத்திரம்.
நிகழ்வுத் துகள்களை அரித்துப் பின்வாங்கும்
இன்னும் ஓயாமல் என் பற்று.

கனவு ஒரு தாய்.
கருப்புகுந்து பலநாள் உறிஞ்சியுண்டு வெளிப்பிதுங்கும்
இன்னும் இறவாமல் என் நினைவு.

கனவு ஒரு நித்திரை.
புலனடங்கிய அனந்தப் பெருவெளியிலெங்கோ
கிடந்து நெளியும்இன்னும் உறங்காமல் என் உயிர்.


கால அவஸ்தை

காற்றின் குளுமை இமைகளில் ஏறுகிறது.
எரிச்சல் மிகுந்துவிட்ட மேனியின் வெம்மையை
ஒத்தி எடுக்கிறது காற்று.
சிலபோது பலமாய் வீசி
கண்ணில் மண் தூவுகிறது.
அந்தக் கிளையில் குருவி
அஞ்சி அமர்ந்து இருப்பது
வெயிலாலா காற்றாலா?
நகரத்தின் இந்த இடுக்கில்
இப்படி ஓர் அமைதி வழிவது
ஆச்சர்யம்.
அல்லது
சப்தங்கள் காதில் ஏற்காத
ஒரு மோன நிலையில்
நானும் குருவியும் இந்தச் சூழலும்
அமர்ந்திருக்கிறோம்.
இருட்ட இன்னும் நேரமிருக்கிறது.
ஆனால்
மழை வரும் போலவும் இருக்கிறது.
குருவீ,
கூட்டுக்குப் போயிரு.


கரு

வேப்பர் விளக்குகளின்
மஞ்சள் வெளிச்சத்தில்
நாம் நடந்து கொண்டிருந்தோம்.
மௌனத்தின் சப்தம்
நமக்கிடையேயான இடைவெளியை
நிரப்பிக் கொண்டிருந்தது.
கைகள் கோர்த்து நடந்தால்தானா
காதல்?
இந்தச் சுதந்திரத்தின் ஆயுளைப் பற்றிய பயம்
வந்திருக்க வேண்டும் உனக்கு.
சட்டென்று கையைப் பற்றிக்கொண்டாய்.
மனம் வெளியே வந்து விழுந்தது.
நீர்த்துக் கொண்டிருந்தது போக்கு வரத்து.
பஸ் நிறுத்தத்தில் கடைசி பஸ்ஸுக்காய்
காத்திருந்த நாலைந்து பேர்
இருப்புக் கொள்ளாமல்
நடக்கவும் நிற்கவும் தலைப்பட்டார்கள்.
நிழற்குடை விடுத்து
கைப்பிடிச் சுவரோரம் நின்றோம்.
எங்கேயோ பார்ப்பதுபோல் திரும்பி
நொடிப்பொழுது நம் முகத்தைக்
கூர்ந்து பார்க்கிறார்கள் அவர்கள்.
நீ
வழக்கத்துக்கு மாறாய்
என் தோளில் தலைசாய்த்துக் கொண்டாய்.
இனிமேல்
காதலைப் பற்றிய கவிதைகள்
எழுத வேண்டியதில்லை என்று
தோன்றியது எனக்கு.


நிறத்தை நுகர்

ஊதாப் பூக்களெல்லாமொரே நிறத்தனவா அவை
மீதாய்ப் பறக்கின்ற தேனீக்களொரே நிறத்தனவா
என்னுடன் மலர் பறிக்க வந்தபோதெலாமுன்னிறம்
பறித்து நான் நின்றதனைக் கண்டதுண்டோ நீ
எனக்கீந்த மலரையாவுன் குழல் சூடிற்றெனவெண்ணினாய்
நான் சூட்டியது நிறத்தை
கறுப்புஞ்செம்மஞ்சளுஞ்சிவப்புங்
குழலாய் முகமாயிதழாய் ஜ்வலிக்கவுனக்கு
நானீந்தவூதா
வானங்கறுப்பானவுடன் வாடிவிட்டாலுமதன்
நிறத்தை நானின்னும்
நுகர்கிறேனுன்னிதழ்களையுமென்
மகரந்தக்குழலினையும்
பரஸ்பரமறிந்துகொண்டோமின்னுமுன்னிறத்தை
நானுமென்னிறத்தை நீயுமற்த்து கொண்டோமா
இனியறிவோமென்னுள்ளூதாவையுன் முடியில்
சூட்டிவிட்டேனுன்னுள்ளென்ன
ஊதாவா நீலமா பச்சையா மஞ்சளா
நிறமற்றவொரு நிறமாவெதுவாயினுமதைப் பேசு
என்னிடமல்ல உன்னிடம்
நானும் நீயும் பேசுவதை விட
எனக்குள்ளிருக்கும் நீயும் உனக்குள்ளிருக்கும் நானும்
பேசுவோம்
பிறகே தெரியும் நம் காதலின் நிறம் ஊதாவா
நிறமற்றவொரு நிறமாவென.


கேப்ஸ்யூல் கவிதைகள்

* அடங்காமல் திரிகின்றன பசித்த பசுக்கள்
புல்லுக்கு அடியில் பூத்திருக்கின்றன
சில கவிதைகளும்.

* கலைப்பதில்லை கனவுகளை வாலிபனின்
வெப்பத்தைத் தணித்துவிட்டு வெளியேறி
வேட்டியில் ஒட்டிக்கொண்ட
நாளைய வாரிசுகள்.

* உலகமொரு கிராமமாச்சு
வீடு மட்டும் தூரமாச்சு
உணர்வுகளால் ஆனதன்றோ
உறவுகளின் இன்டர்நெட்.

* நேற்று என்பது விளங்கி விட்டது; சுவை அதிகம்.
நாளை என்பது அர்த்தம் நிறைந்தது; கடினம்.
இன்று என்பது நேற்றைய நாளை.


சிரிபதியும் சிரிதேவியும்

சிரிதேவிக்கு வயதில்லை
எந்த வயதிலும் அவளை
அவளென்றே அழைக்கலாம்
எந்த ஒரு கிராமத்துக் குட்டிக்கும் குறியீடு அவள்
ஆத்து நீர் சலசலப்பிலும் தென்னோலை சரசரப்பிலும்
அவள் சிரிப்பை உணரலாம்
தாவணி நழுவிய ரவிக்கைப் பரிமாணங்களில்
சோளச்சோறு கம்பங்கூழ்
ஊட்டத்தை அறியலாம்
மஞ்சக் குளிச்சு அள்ளி முடிச்சு
மெட்டி ஒலிக்க மெல்லச் சிரிச்சுப் போகும்
அவளின் அலைபாயும் கண்களில்
வாலிபக் கள்ளத்தைத் தேடலாம்
பேரிளம்பெண் பருவத்திலும்
பாவாடை தாவணி அவளுக்குப்
பொருத்தமாகத்தான் இருக்கும்
அந்த கிராமத்து நாட்களில்
விடலைப் பருவத்தில் ரசித்து வியக்
எனக்கும்
கறுப்பாய் ஒரு
சிரிதேவி இருந்தாள்.


உன் கல்லறைக்கு வருவது எப்படி?
(ஸ்ரீபதி பத்மநாபாவுக்கு)

நடந்து வராதே.
பறந்து வா - அல்லது
நீந்தி வா.

கொடுத்த சத்தியங்களை
முடித்துக் கொடுத்துவிட்டு வா - அல்லது
திருப்பிக் கொடுத்துவிட்டு வா.

வெற்றுடம்புடன் வா.
சட்டை போட்டு வந்தால்
சட்டைப் பைக்குள் ஏதேனும் கவிதைத் தாள்கள்
மிஞ்சியிருக்கக் கூடும்.

ஏதேனும் லட்சியமிருந்தால்
அடைந்துவிட்டு வா- அல்லது
மறந்து விட்டு வா.
இங்கிருந்து திரும்பிச் செல்ல
உனக்கு அனுமதியில்லை.

திறமைகள் ஏதேனும் இருந்தால்
சந்ததிகளுக்குப்
பகிர்ந்து கொடுத்து விட்டு
வராதே.
தங்கள் சித்திகளை
அவர்களே தேடிக் கொள்வார்கள்.

சமூகத்திடம் கேள்விகள் ஏதேனும் மீதமிருந்தால்
விட்டுவிட்டு வா.
இதுவரை அறிந்த பதில்கள் போதுமானவை.

முடிந்தால் யாரேனும்
ஒருவரைக் காதலித்துவிட்டு வா.
ஒருவரிடம் பாசத்தைக் கொட்டிவிட்டு வா.
ஒருவருடன் நட்புக்கொண்டு விட்டு வா.

இறுதியாக,
தனியாக வராதே.
உன்னைப் போல்

ஓரிருவரை
அழைத்து வா.

சிறுகதை


தமிழில் ஸ்ரீபதி பத்மநபா
ரையில் படுத்தபடி கமலா முன்வாசல்கதவின் அடியிலிருந்த நீளமான இடைவெளியினூடே ஃப்ளாட்டுக்கு முன்னாலிருந்த வராந்தாவில் நகர்ந்துகொண்டிருந்த எண்ணற்ற பாதங்களை கவனித்துக் கொண்டிருந்தாள். அவளறியாமலேயே மேலேறியிருந்த அடிப்பாவாடைக்குள் இடம்பெயர்ந்திருந்த ஜட்டி அவளின் பிஞ்சுப் பிருஷ்டத்தில் பள்ளிக் கூடத்தின் மரப்பெஞ்சுகளின் மேடு பள்ளங்கள் பதிந்திருந்த தழும்புகளின் கறுப்புநிறங்களைக் காண்பித்தது. தொடர்ந்து பார்த்துக் கொண்டேயிருந்தால் எங்கே அவள் தன்னுணர்வு பெற்று பாவாடையைத் திருத்தி, அந்தக் காட்சியின் களங்கமின்மையை முடிவுக்குக் கொண்டுவந்து விடுவாளோ எனப் பயந்து நான் கண்களைப் பின்வாங்கிக் கொண்டேன். நான் கமலாவுக்குத் துணையிருக்க ஆரம்பித்து கொஞ்ச நேரமாகிறது. பக்கத்து ஃப்ளாட்டில் கமலாவின் தோழி ப்ரீத்தியின் அப்பா முந்தின நான் திடீரென்று இறந்து விட்டார். சுபத்ரா அங்கே போக ஆயத்தமானபோது அம்மாவின்கூட வருவேன் என்று சொல்லி கமலா அடம்பிடித்தாளென்றாலும் சுபத்ரா அதற்கு சம்மதிக்கவில்லை.
வேண்டாம். நீ இங்கேயே யிருந்தா போதும். ஃப்ளாட்டிலிருந்து வெளியே இறங்கும்போது சுபத்ரா சொன்னாள்.
பத்து வயசாச்சில்ல அவளுக்கு? இன்னும் எத்தனை காலந்தான் இதையெல்லாம் மறைச்சு வக்கிறது? நான் கேட்டேன்.
வேண்டாம். இன்னும் ஆகல. பாடி கொண்டுபோன பிறகு அவ வந்தா போதும்.
சுபத்ராவின் வார்த்தைகளில் அவளுடையதேயான பழமையின் பயங்கள் மின்னிக்கொண்டிருந்தன. பிறகும் ஆசை இழக்காமல் கமலா சிணுங்கியபடி சுபத்ராவின் கையைப் பிடித்தாள்.
அவளும் வரட்டும் சுபத்ரா. குழந்தைக இன்னிக்கு டி.வி.யில பார்க்காததா? நான் கேட்டேன். வேண்டாம்னு சொன்னேனில்ல? கமலாவின் கையைத் தட்டிவிட்டபடி சுபத்ரா சொன்னாள்.
அவ பார்க்காதது இன்னும் நெறய இருக்கு. மோளே, நீ வானவில் பார்த்திருக்கியா?
இல்லை. குற்ற உணர்வுடன் கமலா சொன்னாள்.
இந்த விஷயத்தை அப்பாகிட்ட சொல்லு நீ. வெளியே போவதற்காக சுபத்ரா கதவைத் திறந்தபோது வராந்தாவின் வழியாக மலர்வளையங்களையும் பூக்களையும் ஏந்திய பார்வையாளர்கள் நுழைவதை கமலா உற்றுப் பார்த்தாள்.
டைம் ஆகும்போது சொல்லி அனுப்பறேன். இவளுக்குப் பால் கொடுக்க மறந்துராதீங்க. கதவை சாத்தும் முன்னர் சுபத்ரா சொன்னாள். சுபத்ரா போனபிறகும் எதிர்ப்பைக் காட்டும் குறுகுறுப்புடன் கமலா முன்வாசல் கதவின் அருகே அங்குமிங்கும் அலைந்தாள். இரவு முழுக்க தூக்கம் விழித்ததன் களைப்புடன் நான் படுக்கையில் போய் படுத்தேன். கொஞ்சநேரம் கழிந்தபோது கமலாவும் என் அருகே வந்து படுத்து என் முதுகிலுள்ள ஒரு பெரிய மருவை விரல்களால் திருகிக் கொண்டிருந்தாள். இத்தகைய தருணங்களில் இப்படித்தான் அவள் தன் பாதுகாப்புணர்வைத் தேடிக் கொள்வாள்.
அவள் கேட்டாள். நீங்க நெறைய வானவில் பார்த்திருக்கீங்களா, அப்பா?
சின்னவயசிலே நெறைய பார்த்திருக்கேன். இப்ப கொஞ்ச நாளாச்சும்மா, ஒண்ணுகூடப் பாக்க முடியல.
அது ஏன்ப்பா அப்படி? வானவில்லெல்லாம் தீர்ந்து போயிடுத்தா?
சுத்தி சுத்தி பெரிய கட்டடங்களாச்சேம்மா. அதுவுமில்லாம இந்த தூசியும் புகையும். வானத்தையே சரியாகப் பார்க்க முடியலே. அப்புறமில்லே வானவில்?
மொதமொதோ நீங்க எப்பப்பா வானவில் பார்த்தீங்க? சரியா ஞாபகமில்லம்மா.
ஒருமுறை ரயிலில் போகும்போது பார்த்த வானவிற்களைப்பற்றி நான் இப்போதும் அடிக்கடி நினைப்பதுண்டு. பழனியிலிருந்து பாசஞ்சர் வண்டியில் அப்பாவுடன் திரும்பி வரும்போது, வாளையார் காடுகள் முடிந்தவுடன், தூங்கி விழுந்து கொண்டிருந்த என்னை அப்பா தட்டி எழுப்பினார். ஜன்னல் வழியே பார்க்கச் சொன்னார். அப்பா என்னைத் தொடுவது மிக அபூர்வமாக மட்டுமே. ஆகாயத்தில் ஒன்றல்ல. இரண்டு வானவிற்களை நான் பார்த்தேன். இரட்டை வானவில்லை பார்த்த மகிழ்ச்சியில் அதிசயித்துப்போய் நான் விரிந்த கண்களுடன் நிற்கையில் மூன்றாவது வானவில்லைப் போல அப்பாவின் கை என் தோளைச்சுற்றியது.
கமலா எழுந்து அவளுடைய அறைக்குச் சென்றாள். கொஞ்ச நேரம் அவளுடைய அசைவே இல்லை. நான் எழுந்து சென்று பார்த்தபோது அவன் முன்கதவின் முன்னால் தரையோடு படுத்து சின்ன இடுக்கினூடே வராந்தாவில் நுழைகிற கால்களைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். சுபத்ரா அவனுப்பிய ஆள் கதவைத் தட்டியபோது நான் சட்டையை மாட்டி வெளியே இறங்கினேன். திறந்த கதவு வழியாக ப்ரீத்தியின் வீட்டுக்கு வந்த கூட்டம் வராந்தாவில் குழந்தை விளையாடும் இடங்களைக்கூட அபகரித்துக் கொண்டு வளர்ந்து நீண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. பார்வையாளர்கள் குசுகுசுப்பாய்ப் பேசிக்கொள்வதை நிறுத்திவிட்டாலும் கூட அதன் எதிரொலி இடைவழிக்கு மேல் அடைந்து உறைந்து நின்றிருந்தது.
நீ கதவைச் சாத்திக்க மோளே. அம்மாவை இப்ப அனுப்பறேன்.
வெளியே போகும்போது நான் சொன்னேன். ப்ரீத்தியின் அப்பாவின் மரணத்திற்குப் பிறகும் அவளும் அம்மாவும் எங்கள் அண்டை வீட்டார்களாகவே இருந்து வந்தார்கள். ப்ரீத்தியின் அப்பாவின் ஆபீசிலேயே வேலை செய்து வந்த அவளுடைய அம்மா பெரும்பாலும் ஆஸ்த்மாவினால் லீவ் எடுத்து வீட்டிலேயே இருந்தார்கள். ப்ரீத்தி சீக்கிரமே பெரிய பெண்ணாகிவிடுவாள் என்று எங்களுக்குத் தோன்றியது.
இந்தக் குழந்தைகளுக்கு அவங்க எதைநோக்கி வளர்றாங்கன்னு தெரியமாட்டேங்குது. இடுப்பு வலியால் அவதிப்பட்டு படுக்கையில் படுத்தபடி ஒருநாள் சுபத்ரா சொன்னாள்.
அப்படீன்னா?
இன்னிக்கு ப்ரீத்தியும் நம்ம பொண்ணும் விளையாடறதை கவனிச்சேன். இன்னும் ஒண்ணு ரெண்டு வருஷத்திலே அவங்க சின்னக் குழந்தை ஆயிடுவாங்கன்னும், அப்போ முலைப்புட்டியிலே பால் குடிப்பாங்கன்னும் போகுது விளையாட்டு.
எனக்கு அலுவலகத்துக்கு நேரமாகிக் கொண்டிருந்தது.
இப்படிப் படுத்திட்டிருந்தா எப்படி? நீ போய் சீக்கிரம் சப்பாத்தியும் புஜியாவும் செஞ்சு கேரியரில வை.
குழந்தைகள் நிகழ் காலத்திடமான இந்த வெறுப்புடன் கூட அவர்கள் மனித குலத்திலிருந்தே அகன்று கொண்டிருக்கிறார்கள் என்று எனக்குத் தோன்ற ஆரம்பித்துவிட்டது.
அவங்க இப்ப பொம்மைகளை வச்சு விளையாடறதில்ல. நான் சமையலறையில் சென்று சுபத்ராவிடம் சொன்னேன்.
சுபத்ரா ஏதும் பேசாமல் உருளைக்கிழங்கின் தோலை உரித்துக் கொண்டிருந்தாள். பொம்மைகளை வச்சு விளையாடினாத்தான் பெரியவங்களாகும்போது மத்த மனுஷங்க கூட சுலபமா பழகமுடியும்.
உம். சுபத்ரா உம் கொட்டினாள்.
இப்பவெல்லாம் ப்ரீத்தியும் நம்ம பொண்ணும் எப்போ பார்த்தாலும் துப்பாக்கியும் ட்ரக்கும் வெச்சுத்தான் விளையாடறாங்க. எந்திரங்க மேலதான் அவங்களுக்கு அதிக விருப்பம். சுபத்ரா தலைநிமிராமல் சப்பாத்தி மாவு பிசையத் தொடங்கினாள்.
அது கஷ்டம் இல்லையா? ஒருநாள் நானே முன்வந்து அவங்களை ஒரு வீடு வச்சு விளையாடக் கூப்பிட்டேன்.
நான் கேட்டிட்டுதான் இருந்தேன். கீழே க்ரவுண்டில் பாட்மிண்டன் விளையாடப் போகணும்னு சொல்லி அவங்க கீழே போறதையும் நான் பார்த்தேன். சுபத்ரா தலையுயர்த்திச் சொன்னாள்.
நான் ஒன்றும் பேசவில்லை. குழந்தைகளால் நிராகரிக்கப்படுவது அவ்வளவு சுகமான அனுபவம் அல்ல.
திடீரென்று சுபத்ரா வேலையை நிறுத்திவிட்டு தலை உயர்த்திக் கேட்டாள்: வீடு வெச்சு விளையாடறது உங்களுக்கு அவ்ளோ இஷ்டம்னா இதோ, சமையல் ரூம். இங்கே சப்பாத்தியும் புஜியாவும் செஞ்சு விளையாடலாமில்ல? எனக்காவது கொஞ்சம் ரெஸ்ட் கிடைச்சிருக்கும்.
சுபத்ராவின் கண்கள் நிறைந்தன. நான் சமையலறையிலிருந்து பின் வாங்கினேன்.
அமாவாசை நெருங்கியபோது ப்ரீத்தியின் அம்மாவுடைய ஆஸ்த்மா அதிகமானது. ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். கமலாவைக் கூட்டிக்கொண்டு அவரைப் பார்ப்பதற்காகப் போனேன். ஜெனரல் வார்டின் நீளமான ஹாலில் கடைசி கட்டிலில் ப்ரீத்தியின் அம்மா படுத்திருந்தார். காலடியில் ப்ரீத்தி ஒரு சித்திரக்கதை வாசித்தபடி உட்கார்ந்து கொண்டிருந்தாள். கையிலிருந்த அரை டஜன் சாத்துக்குடியை வெள்ளைப் பெயிண்ட் அடித்த இரும்பு மேசையில் வைத்தேன். மூக்கில் ஆக்சிஜன் ரப்பர் குழாய் வைக்கப்பட்ட ப்ரீத்தியின் அம்மா என்னைப் பார்த்து சிரிக்க முயன்றார். ப்ரீத்தியை அழைத்துக் கொண்டு கமலா ஆஸ்பத்திரியின் வராந்தாவை நோக்கி நடந்தாள். நின்று நின்று கால் வலித்தபோது ப்ரீத்தியின் அம்மாவிடம் விடைபெற்று வீட்டிற்குத் திரும்பினோம்.
ப்ரீத்தி என்ன சொன்னா? நான் கேட்டேன்.
பல தடவை தேங்க்ஸ் சொன்னா.
எதுக்கு?
வந்ததுக்கு.
சுபத்ராதான் காலையிலும் சாயங்காலமும் தினமும் வர்றாளே.
அம்மாவும் கஞ்சி கொண்டு வர்ற பொண்ணும் மட்டும்தான் வர்றாங்களாம். வேற யாரும் வர்றதில்லையாம்.
நாம நாளைக்கும் வரலாம். நான் சொன்னேன்.
சட்டென்று கமலா என் கையைப்பிடித்து முத்தமிட்டாள்.
வீட்டிற்குத் திரும்பி வந்து தூங்கலாம் என்று படுத்த போதுதான் ப்ரீத்தியின் அம்மா இறந்துவிட்டார் என்று யாரோ வந்து சொன்னார்கள். இந்த முறை சுபத்ரா கமலாவை ப்ரீத்தியின் வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போக எதிர்ப்புக் காட்டவில்லை. வெள்ளை சல்வாரும் கமீசும் அணிந்து கமலா சுபத்ராவுடன் படியிறங்கும்போது தான் கவனித்தேன்: சுபத்ராவின் தோள் வரை வளர்ந்து விட்டாள் கமலா. அவளின் வயிற்றில் ஒரு சின்ன கர்ப்பப் பாத்திரம் மலரக் காத்திருக்கிற தென்பதையும் திடீரென்ற நினைத்துக் கொண்டேன். இரவு முழுக்க மரணவீட்டில் சுபத்ராவும் கமலாவும் அடுத்த ஃப்ளாட்டின் சில பெண்களும் சேர்ந்து கண் விழித்திருந்தார்கள். ஏதோ தூரப் பிரதேசத்திலிருந்து ப்ரீத்தியின் அம்மாவின் அண்ணன் வருவதற்காக எல்லோரும் காத்திருந்தார்கள். காலையில் ப்ரீத்தியின் அம்மாவின் ஆபீஸிலிருந்து பத்திருபது பேர்கூட வந்து சேர்ந்தார்கள். இடைவழி பெரும்பாலும் சந்தடியற்றிருந்தது. அதன் மூலையில் அபார்ட்மெண்ட் குழந்தைகள் ஓசையில்லாமல் விளையாடிக் கொண்டிருந்தார்கள். ப்ரீத்தியின் அம்மாவின் அண்ணனும் சில உறவினர்களும் ப்ரீத்தியின் அம்மாவின் வயதான பி.ஏ.வும் ஆபீஸிலிருந்து சிலரும் நானும் சேர்ந்து மின்மயானத்திலிருந்து திரும்பி வந்த போது இரவாகிவிட்டிருந்தது. கமலா அமைதியாக சாப்பாட்டு அறையின் மேசையின் முன்னால் ஒரு டம்ளர் பால் வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். பின்னால் நின்று சுபத்ரா அவளுடைய நீண்ட தலைமுடியைச் சீவிப் பின்னிக் கொண்டிருந்தாள். நான் உள்ளே நுழைந்து சாய்வு நாற்காலியில் சாய்ந்து அன்றைய தினசரிகளை அப்போதுதான் திறந்தேன். அம்மா சாப்பாட்டு அறையில் கமலா அழைத்தபோது செவிமடுத்தேன்:
அம்மா நாம - நானும் நீங்களும் ப்ரீத்தியும் எல்லாரும் சாகும்போது இப்படித்தான் இருக்குமா?
எப்படி? சுபத்ரா கேட்டாள்.
இப்படி. அதிகமா யாரும் வராம, அன்னிக்கு ப்ரீத்தியோட அப்பா இறந்தபோது எத்தனை கால்களை எண்ணினேன் நான்!
சுபத்ரா ஒன்றும் பேசவில்லை. குழந்தைகள் பிறவியிலேயே சோஷலிஸ்ட்டுகள்தான். சமத்துவமின்மை அவர்களை வேதனைக்குள்ளாக்குகிறது. சுபத்ரா படுக்கை அறைக்குச் சென்று இரவு உடை அணிந்து வெளியே வந்தாள். நான் ப்ரீத்திக்குத் துணையாய் படுக்கப் போறேன். சுபத்ரா கமலாவை முத்தமிட்டுச் சென்னாள்: மோளூ, இன்னைக்கு அப்பாகூடப் படுத்துக்கோ.

நான் செய்திகளை ருசித்தபடி கொஞ்சநேரம் இருந்தேன். கமலா பால் குடிப்பதை நிறுத்திவிட்டு சாப்பாட்டு அறையின் விளக்கை அணைத்து எங்களின் கட்டிலில் போய்ப் படுத்தாள். கொஞ்ச நேரம் கழித்து தினசரியை ஓசையுடன் கீழே போட்டு அன்றைய தினத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு உறங்க நானும் தயாரானேன். படுக்கையறையில் சென்று கட்டிலின் ஓரமாய்ப் படுத்து கமலாவையே பார்த்துக்கொண்டிருந்தேன். எங்களின் பழைய ஃப்ரிட்ஜ் அவ்வப்போது திடுமென விழித்துக் கொண்டு புலம்புவதைத் தவிர வீடு மௌனமாயிருந்தது. திடீரென்று வருடங்களுக்கு முன்னால் என் தோள்களை வளைத்துக் கிடந்த அப்பாவின் கைகளின் பாரம்பரியம் எனக்குள் விழித்துக் கொண்டது. எனக்குள் ஓடிக் கொண்டிருக்கிற அதே ‘பி’ பாஸிட்டிவ் ரத்தத்தினுடைய பிடிவாதமும் அதுதான் - கமலாவைத் தொடவேண்டும். படுக்கையை சூடாக்கத் துவங்கியிருக்கும் அவளோடு இணைந்து கொள்ள இரட்டை வானவில்களைப் பார்த்தபடி நின்ற பையனின் பாரம்பரியம் என்னை முன்னால் தள்ளியது. என்னையே நான் ஒரு கான்வெக்ஸ் கண்ணாடியில் சிறிய உருவத்தில் படி யெடுத்துக் கிடத்தி யிருக்கிற என் மகளோடு உறவை ஸ்தாபிக்க என் கை நீண்டது. கண்கள் திறக்காமல், இன்னும் மூன்றாம் நம்பர் ஷுவிலிருந்து வளராத பிஞ்சுக் கால்களால், கமலா என்னை நெருங்க விடாமல் மார்பில் உதைத்துத் தள்ளினாள்.
--------------------
(அம்ருதா செப்டம்பர் 2007)
-------------------
(என். எஸ். மாதவன் 1948 - ல் எர்ணாக்குளத்தில் பிறந்தார்.1975 - ல் ஐ.ஏ.எஸ். பட்டம் பெற்றார்.கேரள அரசின் வருவாய்த்துறையில் செக்ரட்டரியாக இருந்தார்.இப்போது மத்திய அரசுப் பணியில் இருக்கிறார்.1970 - ல் கல்லூரி மாணவர்களுக்காக மாத்ருபூமி நடத்திய சிறுகதைப் போட்டியில் ‘சிசு’ முதல் பரிசு பெற்றது. சூளைமேட்டுச் சவங்கள் (1981), ஹிக்விட்டா (1993) ஆகிய சிறுகதைத் தொகுப்புகள் பிரசுரமாகியிருக்கின்றன.சென்ற நூறு வருடங்களில் மிகச்சிறந்த பத்து மலையாளக் கதைகளில் ஒன்றாக ஹிக்விட்டா தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது. ஹிக்விட்டாவுக்கு 1994 - ல் பத்மராஜன் விருது அளிக்கப்பட்டது.இந்தச் சிறுகதை ஹிக்விட்டா தொகுப்பிலிருந்து. )

Tuesday, August 21, 2007

நெஞ்சில் ஒரு முள் *

- பெரியார் திரைப்படம்

- ஸ்ரீபதி பத்மநாபா

தி. ஜானகிராமனையும் சி.சுப்ரமணிய பாரதியையும் வலுக்கட்டாயமாகப் பிடித்துக் கசக்கி உருண்டையாக்கி கேமிராவுக்குள் திணித்ததையெல்லாம் பார்த்து பயந்துபோன மனதோடுதான் ஞானராஜசேகரனின் ‘பெரியார்’ திரைப்படத்தின் அரங்கத்துக்குள்ளும் நுழைய வேண்டியிருந்தது.

ஆரம்பக் காட்சிகளில் சத்யராஜை லொள்ளு பிடித்த கவுண்டனாகவே பார்த்துப் பழகிய கண்களை பெரியாருக்குள் இழுத்து வர பாடுபட வேண்டியிருந்தது. காட்சி அமைப்புகளும் அப்படித்தான். ஆனால் சிறுகச்சிறுக அந்த மகா நடிகன் பெரியாராய் மனசுக்குள் சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிடுகிறான். அவன் அவன்தான்!

தமிழ் சினிமாவின் தற்போதைய பிம்பம் மிக அழகான க்ளோஸப் ஷாட்டாக இருக்கிறது எனலாம். திரைமொழியில் என்ன சொல்லலாம், எப்படிச் சொல்லலாம் என்பதில் தேர்ந்த வல்லுனர்கள் நமக்கு வாய்த்திருக்கிறார்கள். பருத்திவீரன், சென்னை - 28 என்று தமிழ் கிராமத்தையும் தமிழ் நகரத்தையும் உலகெங்கும் ‘இந்தா பிடி எங்கள் சினிமா’ என்று தூக்கி வீச நமக்கு ஆட்கள் இருக்கிறார்கள்.

நாமெல்லோரும் கொண்டாடும் ஒரு தலைவனின் வாழ்க்கை வரலாற்றை நாம் திரையில் பார்க்கிற பொற்காலமும் வந்துவிட்டது என்ற மகிழ்ச்சியுடன் உள்ளே நுழைகிறோம். மிகச் சிறப்பான ஒளிப்பதிவு மிகச் சிறப்பான படத்தொகுப்பு... மிகச் சிறப்பான நடிப்பு... ஆனந்தக் கண்ணீரோடு படத்தைப் பார்க்கும்போதும் வெளியே எட்டிப் பார்க்கிறது ஒரு வருத்தக் கண்ணீர்த்துளி... ஞானராஜசேகரனின் முந்தைய படங்களைப் போலவே ஒரு தொலைக்காட்சித் தொடரின் சாயலோடுதான் காட்சிகள் இருக்கின்றன.

அறுநூறு தென்னைகளை வெட்டிச் சாய்ப்பது எப்படி ஒரு அற்புதமான காட்சியாக வெளிவந்திருக்க வேண்டும்! ஒரு வரி வசனத்தில் இதைச் சொல்ல சினிமா தேவையில்லை; ரேடியோ நாடகம் போதும்! கள்ளுக்கடைப் போராட்டத்தை ஒரு நிமிடக் காட்சியாகப் பதிவு செய்யலாமா?

‘உங்கள் குலத்தொழிலை செய்வதை நிறுத்துங்கள்’ என்கிறார் பெரியார். அதற்கொரு காட்சி: பெரியார் ஆற்றங்கரையோரமாக நடந்து வந்துகொண்டிருக்கிறார். ஆற்றங்கரை யோரத்தில் நாவிதனும் இருக்கிறான்; செருப்புத்தைப்பவனும் இருக்கிறான்; துணி துவைப்பவனும் இருக்கிறான்! ஒரே வசனத்தில் எல்லோருக்கும் அந்த செய்தியை அறிவித்து விடுகிறார்!.

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி சூப்பராகத் தமிழில் உரையாடுகிறார்; வைக்கத்து நம்பூதிரிகள் நந்நாயி தமிழ் பேசுகிறார்கள்! காந்தி இந்தி அல்லது ஆங்கிலத்தில் பேசுவாரென்றும் நம்பூதிரிகள் மலையாளத்தில் பேசுவார்களென்றும் அறியாத முட்டாள்களா உங்கள் படம் பார்க்க வருகிற தமிழ் மக்கள்?

நல்ல ரசிகர்களை அவ்வப்போது கண்ணீர் மல்கச் செய்யும் காட்சியமைப்புகளும் வசனங்களும்... ‘பெரியார்’ திரைப்படத்தில் ஸ்ரீதர், பாலச்சந்தர் அல்லது விக்ரமன் போன்றவர்களின் ‘இடையீட்டை’ நாங்கள் எதிர் பார்க்கவில்லை.

எங்கள் தலைவனின் வாழ்க்கையைத் திரையில் கண்டு புரட்சி நெருப்புகளாக நாங்கள் வெளியே வந்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட திரைப்படங்களை யார் எடுப்பார்கள்? இந்த எண்ணத்தின் மூலம் குரோசோவாவையும் பத்மராஜனையும் ஜான் ஆப்ரஹாமையும் நினைவு படுத்தியதற்கு நன்றி ஞானராஜசேகரன்!

பெரியாரின் வாழ்க்கையை பாமர மக்களும் கொண்டாடும் விதத்தில் ஜனரஞ்சகமாகச் சொல்லியிருக்கும் விதம் பாராட்டப் படக்கூடியதுதான்; ஆனாலும்...
சத்யராஜின் திறம்பட்ட நடிப்பு திரைப்படத்தை தூக்கி நிறுத்துகிறதுதான்; ஆனாலும்...
ஜோதிர்மயி, நாகம்மையாகவே மாறி நம்மை உலுக்கியெடுத்திருக்கிறார்; ஆனாலும்...
இந்தப் படமோ, சத்யராஜோ, ஜோதிர்மயியோ, மக்களின் விருதுயோ அல்லது தேசிய விருதையோ பெறுவதற்கு தடையாக இருக்கும் ஒரே ஒரு தடை என்னவென்றால்...

படம் துவங்குமுன் நண்பர் சாரு சொன்னார்: ‘‘ஞான ராஜசேகரனை ஒரு வருஷம் கே.எஸ். ரவிக்குமார் கிட்ட அஸிஸ்டென்டா இருக்கச் சொல்லணும்.’’ அதை நானும் வழிமொழிகிறேன்.

இத்திரைப்படத்தை முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் எட்டுமுறை பார்த்தாராம்! இந்த வயதிலும் அவர் காட்டும் நெஞ்சுறுதியை வாழ்த்த வயதில்லை; வணங்குகிறேன்.

* நெஞ்சில் ஒரு முள்: திரைப்படத்தின் உச்சக்காட்சியில் பெரியார் பேசுவது.

(ஜூன்2007, அம்ருதா மாத இதழ்)

ஜிவாசி

சிவாஜி - ஸ்ரீபதி பத்மநாபாவின் பார்வையில்

முன்னொரு காலத்தில் சிவாஜி ஆறுமுகம் என்றொரு வாலிபன் வாழ்ந்து வந்தான். ஏழைப் பெற்றோர்களுக்குப் பிறந்த அவன் தன் ஏழ்மையிலும் மிகவும் சிரமப்பட்டு படிப்பை முடித்து விட்டு பொருள் தேடி தூரதேசத்திற்குச் சென்று அங்கே இருநூறு கோடி வராகன்களுக்கும் மேல் திரவியம் சேர்த்துக் கொண்டு தன் தாய்நாட்டுக்குத் திரும்பி வருகிறான். பெரும் இவட்சியவாதியான அவனுக்கு இரண்டு மாபெரும் இலட்சியங்களிருந்தன. அவற்றில் ஒரு இலட்சியத்தை அவன் அடைந்த காதை வருமாறு:

மேலைநாட்டு நவநாகரிக யுவதிகளைக் கண்டு சலித்து வெறுத்துப் போன அவனுக்கு தமிழ்ப் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் இன்னும் விடாமல் கடைப்பிடித்துக்கொண்டிருக்கும் ஒரு மங்களமான யுவதியை மணந்து கொள்வது இலட்சியம். இதற்காக அவன் ஐந்து நட்சத்திர விடுதிகளைத் தாண்டிப் போய் கோவில் குளங்களில் அலைந்து திரிந்து தமிழ்ச்செல்வி என்ற அ,ம,நா,ப நிறைந்த ஒரு நங்கையைக் கண்டடைந்து, அவளுடன் பழகுவதற்காக குடும்பத்தோடு அவளின் பின்னால் அலைய, அவள் வசித்து வந்த தெருவாசிகளும் இவர்களுக்கு உதவ, அவள் மனமும் குடும்பத்தாரின் மனமும் கனிந்து திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்கும் வேளையிலே இந்த ஜாதகக்காரனைத் திருமணம் செய்தால் அவள் விதவையாகிவிடுவாள் என்று கணியன் கூறிவிட அவள் செய்வதறியாமல் திகைத்து நிற்க அவன் மின்சார ஊர்தியின் தண்டவாளத்தில் சென்று நின்றுவிட அவளும் மீண்டும் செய்வதறியாமல் தன் சிவப்பு மேலாடையை அவிழ்த்துக் காட்டி ஊர்தியை நிறுத்தச் செய்து அவனுடன் இணைகிறாள்.

நிற்க. அவனுடைய இன்னொரு இலட்சியம் ஏழ்மையில் பரிதவிக்கும் தன் தாய்த்திருநாட்டை வளம் கொழிக்கச் செய்வதாகும். இதற்காக, தான் சேர்த்து வைத்த திரவியத்தை எல்லாம் செலவிட்டு மருத்துவப் பல்கலைக்கழகத்தைத் துவங்குகிறான். அந்த ஊரில் மருத்துவத் துறையையும் கல்வித்துiறையையும் குத்தகைக்கு எடுத்து அரசாங்கத்தையே ஆட்டிப்படைக்கும் ஆதி என்னும் பெரும் செல்வந்தன் சிவாஜியின் வளர்ச்சியைத் தடுத்து அரசாங்கத்தின் மூலம் அவனுடைய ஆஸ்தியை முழுக்க செயலிழக்கச் செய்து அவனுக்கு ஒரு வராகன் பிச்சை அளித்து பிழைத்துக் கொள்ளச் சொல்கிறான். அந்த ஒரு வராகனை வைத்துக்கொண்டு அவன் ஆதியின் நூறு கோடி வராகன்கள் கறுப்புப் பணத்தை தந்திரமாக அபகரிக்கிறான். அப்போது அவனுக்கு ஒரு ஞானமுதயமாகிறது. ஒருவனிடம் மட்டுமே இவ்வளவு கறுப்புப் பணமிருந்தால் நாடு முழுக்க வாழும் செல்வந்தர்களிடம் எவ்வளவு கறுப்புப் பணமிருக்குமென்று. அந்தச் செல்வந்தர்களின் கணக்காளர்களையும் சாரதிகளையும் எப்படியோ கூட்டி வந்து ஒரு இடத்தில் அடைத்து வைத்து நான்கு அடியாட்களின் மூலம் அடித்து உதைத்து கறுப்புப் பணத்தின் இருப்பிடங்களைக் கண்டறிந்து கவர்ந்து அதைத் தூரதேசங்களுக்கு அனுப்பி தன் பெயரில் அன்பளிப்பாய் திருப்பி அனுப்பச் செய்து வெள்ளைப் பணமாக்கி அந்தப் பணத்தையெல்லாம் தன் தாய்த் திருநாட்டின் வளத்துக்காகப் பயன்படுத்துகிறான். இதைக் கண்டு பொறாத ஆதியும் மற்ற ... கபோதிகளும் சூழ்ச்சி செய்து தமிழ்ச்செல்வியைத் தூண்டி அவனைச் சிறையிலடைக்கிறார்கள். அங்கு உயிரையே இழந்து தான் முன் செய்த பலனால் மீண்டும் உயிர்த்தெழுந்து எதிரிகளின் முன் எம்ஜியாராக உருமாறி அவர்களை அழித்து தமிழ்ச்செல்வியுடன் இணைந்து மீண்டும் தாய்நாட்டுக்கு சேவைகள் செய்து சுபிட்சமாக வாழ்ந்து வரலாயினான்.

இப்படி ஒரு கதையை ரஜினி ஷங்கர் ஏவியெம் போன்ற பெயர்களில்லையென்றால் நீங்கள் துணிந்து திரையரங்கிற்குள் செல்வீர்களா?சாதாரணமாகவே ஷங்கரின் திரைப்படங்கள் என்றால் ஒரு அம்புலிமாமா கதையும் அதன் கூடவே இயைந்து வருகிற ஒரு சமூக விழிப்புணர்வு இழையும் பின்னிய திரைக்கதைகளாகத்தான் இருக்கும். என்றாலும் அதையெல்லாம் மறக்கடிக்கிற சுவாரஸ்யமான திரைக்கதையும் புத்திசாலித்தனமான காட்சியமைப்புகளும் அங்கங்கே தெறிக்கும் சில நுணுக்கங்களும் கொஞ்சம் ஓவர்டோஸாக இருந்தாலும் ரசிக்க வைக்கும் பிரம்மாண்டமும் அவரை ஒரு நல்ல படைப்பாளியாக (பாய்ஸ் தவிர) அடையாளம் காட்டியிருந்தன.

சிவாஜியில் ரஜினி இருப்பதால் இதையெல்லாம் எதிர்பார்க்கக்கூடாதா என்ன? தரைமட்ட நகைச்சுவைக் காட்சிகள்... அபத்தமான, பள்ளிச் சிறுவர்கள் பேசுவதைப் போன்ற வசனங்கள்...(என்னை ஏம்மா கறுப்பா பெத்தீங்க? வெள்ளையாப் பெத்தா அழுக்காயிடுவேன்னுதாம்பா.) ரஜினி ரசிகர்களே கூட வேண்டா வெறுப்பாய் வெறுமனே நகைச்சு வைக்கிறார்கள். தொலைக்காட்சிகளில் சிரிப்போ சிரிப்பு துணுக்குக் காட்சிகளுக்காகவா இவ்வளவு கோடி செலவு செய்து படமெடுக்கிறார்கள்?

அர்ஜுனுக்கும் பிரபுதேவாவுக்கும் கமல்ஹாசனுக்கும் எடுத்துக் கொண்ட சிரத்தையை ரஜினிக்கு எடுக்க வேண்டியதில்லை என்று ஷங்கருக்கு யார் சொல்லிக் கொடுத்தது? அவரே தயாரித்த நல்ல படங்களையும் ரஜினி ரசிகர்கள் பார்த்திருக்கிறார்கள்; அவர்களின் ரசனை இன்னும் உயரவேயில்லை என்று குறைத்து மதிப்பிடுவது சரியா?

சிறப்பான தொழில்நுட்ப வல்லுனர்களைத் துணைக்கு வைத்துக் கொண்டு கலக்கப் போவது யாரு ஸ்டைலில் சிவாஜியையும் எம்ஜியாரையும் கமல்ஹாசனையும் சமயங்களில் வடிவேலுவையும் இமிடேட் செய்ய வைத்து ரஜினியை கோவை குணாவுடன் ஒப்பிடும் அளவுக்கு தரம் தாழ்த்தியிருக்க வேண்டாம்.

ஒவ்வொரு காட்சிக்கும் எவ்வளவு செலவு செய்திருக்கிறார்கள் எவ்வளவு கடுமையாக உழைத்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. ஆனால் எல்லாம் எதற்காக?

எனக்குப் பிடித்தவை ட்ரைவ் இன் தியேட்டரின் கார்கள் மோதலும் உச்சகட்டக் காட்சிகளின் விறுவிறுப்பும் இறுதியில் சிவாஜி எம்ஜியாராகும் சுவாரஸ்யமும்தான். இது மட்டும் போதுமா ஒரு ஷங்கர்-ரஜினி-ஏவியெம் கூட்டணிக்கு?

சமூக விழிப்புணர்ச்சியைத் தூண்டுவதற்காக ஷங்கர் படங்கள் எடுக்கிறார்; எந்தப் படம் அதில் வெற்றி பெற்றது? அவருடைய படங்கள் பொழுதுபோக்குக்கானவை. அதை நல்ல முறையில் தந்தாலே ரசிகர்கள் திருப்தியடைவார்கள். ஷங்கர் படங்கள் சமூக விழிப்புணர்ச்சியைத் தூண்டுகிறதா என்று ரசிகனுக்கு கவலையில்லை; ஸ்ரேயாவின் விழி, புணர்ச்சியைத் தூண்டுகிறதா என்பதே அவன் கவலை.

இந்த பிளாக் மணி பிளாக் மணி என்று சொல்கிறார்களே, இதை யார் கண்டுபிடித்தது? யார் சீராட்டிப் பாராட்டி வளர்த்தது? அதை வொயிட் மணி ஆக்குவதற்கான தொழில் ரகசியத்தையும் சொல்லித் தந்து விடுகிறார்கள். பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விட்டு மீண்டும் பிள்ளையைக் கிள்ளிவிடுவதில் அவர்களுக்கு நிகர் அவர்களேதான். சாத்தான்கள்ள வேதம் ஓதுவது அவர்களின் புண்ணியத்துக்காகத்தான் என்பது ரசிகனுக்குத் தெரியாதா என்ன?

இந்தப் படத்திற்கான முதல் நாள் டிக்கெட்டுகள் சென்னையில் 1200 ரூ. வரை விற்றதாம். நான் சென்ற தியேட்டர் வாசலில் உடல் மெலிந்து கசங்கிய சட்டை லுங்கியுடன் ஒருவன் ‘ஜிவாசி... 500... ஜிவாசி... 500’ என்று அலைந்து கொண்டிருந்தான்.

பாமர ரசிகர்களின் வியர்வை நாற்றமடிக்கும் கறுப்புப் பணத்தை கவர்ந்து பெரும் பண முதலைகளுக்கு விநியோகிக்கும் விதத்தில் சிவாஜிக்குக் கிடைத்திருப்பது வெற்றியே.

செய்நேர்த்தி மிக்க தொழில்நுட்பக்கலைஞர்கள், ரஜினிகாந்தின் மாஸ், ஏவியெம்மின் பறக்கும் பணம் எல்லாமிருந்தும் ஷங்கரின் சிறுபிள்ளைத்தனமான திரைக்கதை சுஜாதாவின் சிறுபிள்ளைத்தனமான உரையாடல்.... படத்தின் உபதலைப்பில் ஒரு சிறு எழுத்துப்பிழையை யாரும் கவனிக்கவில்லை போலிருக்கிறது... சிவாஜி The BOSS அல்ல; BOYS!


(ஜூலை 2007, அம்ருதா மாத இதழ்)