சமீபத்தில் நடிகர் பார்த்திபன் அவருடைய ஆசிரியர் ஒருவரால் ஏமாற்றப்பட்டதைப் பற்றி எழுதியிருந்தார். நான் வாழ்க்கையில் உயர்வதற்காக எனக்கு உதவிய ஆசிரியர்களைப் பற்றித்தான் எனக்கு நிறைய எழுத இருக்கிறது. அவர்களை இன்னும் திருப்திப்படுத்த முடியாமல் இருக்கிறோமே என்ற வருத்தமும்.
பதினைந்து வருடங்களுக்கு முன்னால் கல்லூரியில் கணிப்பொறித்துறையில் எனது பேராசிரியராக இருந்தவர் மாதவன். என்னுடைய பாட்டெழுதும் திறமையில் அவருக்கு அபார நம்பிக்கை. கல்லூரிக் காலத்து காதல் கவிதைகளும் பின்னர் வெளியே வந்து நண்பர்களுடன் சேர்ந்து 'பெரும்பொருட்செலவில்' தயாரித்து நாங்கள் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்த ஒரு இசைத்தொகுப்பும் அவருக்கு அந்த நம்பிக்கையை அளித்திருந்தது.
இதயத்தில் மிருதங்கம் அடிக்கின்றது
பருவத்தில் கனவொன்று வெடிக்கின்றது
ஆதலால் இது காதலா ?
நம் காதல் வாக்கியத்தில்
நான் எழுவாய் என்றால் நீ பயனிலை
அநத வாக்கியத்திலிருந்து
நீ எழுவாய் என்றால் நான் பயனிலை !
போன்ற வரிகள் நண்பர்கள் மத்தியில் இவன் சினிமாவுக்குப் பாட்டெழுத சரியான ஆள்தான் என்ற உணர்வை உருவாக்கியிருந்தது. (இந்த வரிகள் எல்லாம் பதிவு செய்யப்பட்டுவிட்டவை. இந்த வரிகள் உள்ள பாடல்களை நீங்கள் கேட்க நேர்ந்தால் அந்தப் பாடல் நான் எழுதியது எனவோ அல்லது அந்தப் பாடலாசியர் உயிரோசை வலையிதழின் தீவிர வாசகர் எனவோ நீங்கள் யூகித்துக்கொள்ளலாம்.)
இந்தப் பாடல்களைக் கேட்டுவிட்டுத்தான் மாதவன் சார் என்னை அழைத்து பிரபல பாடகர்களை பாடவைத்து ஒரு ஆல்பம் செய்யலாம். நான் தயாரிக்கிறேன். அது உனக்கு சினிமா ஏணியின் முதல் படியாக இருக்கும் என்றார்.
எங்கள் நகரத்திலும் ஒரு ரெக்கார்டிங் ஸ்டுடியோ இருந்தது. அது ஒரு வணிக வளாகத்தின் தரைகீழ்த் தளத்தில் இருந்தது. அங்கே ரெக்கார்டிங் செய்தால் டூயட் பாடலின் இடையே மோட்டார் பைக் சத்தம் கேட்கும். ஏனென்றால் மேல்தளத்தில்தான் பைக் பார்க்கிங். அந்த அளவுக்கு சவுண்ட் ப்ரூஃப் ! அந்த ஸ்டுடியோவில்தான் நானும் சுதேசமித்திரனும் பரஸ்பரம் அறிமுகமானோம். சுதேசமித்திரனின் கல்லூரித் தோழரான ஏ.எம்.சுரேஷ்தான் இப்போதும் என்னுடைய ஆஸ்தான இசையமைப்பாளர்.
சுரேஷூடன் கலந்தாலோசித்து தமிழில் ஒரு கஸல் இசைத்தொகுப்பைக் கொண்டுவரலாம் என்றும் எஸ்.பி.பி., உண்ணிக்கிருஷ்ணன், வாணி ஜெயராம் போன்றவர்களைப் பாடவைப்பது என்றும் முதலில் ட்ராக் ரெக்கார்டிங்கை திருச்சூரிலுள்ள ஒரு ஸ்டுடியோவில் வைத்துக்கொள்வது என்றும் பிரபலங்களின் குரல் சேர்ப்பை மட்டும் சென்னையில் வைத்துக் கொள்ளலாம் என்றும் முடிவு செய்தோம் சென்னையைவிட திருச்சூர் எங்களுக்குப் பக்கம் என்பதால்.
திருச்சூர் நகரத்தில் ஒரு பிரதான சாலையில் இருக்கிறது அந்த ஸ்டுடியோ. கிறிஸ்துவ மிஷனரியால் நடத்தப்படுவது. பூந்தோட்டமும் மரங்களும் காங்கிரீட் சாலைகளுமாக ஒரு தியான நிலையம் போல் அழகும் அமைதியும் நிறைந்தது. ஒரு ஃபாதர்தான் அதன் நிர்வாகி. ரெவரெண்ட் பிரான்சிஸ் ஆலங்காட்டுக்காரன் என்ற நீண்ட பெயருடையவர். ஃபாதர் என்றவுடன் நீண்ட வெள்ளை அங்கியையும் மார்பு வரை தொங்கும் சிலுவையையுமாக உருவகப்படுத்திக் கொள்ள வேண்டாம். டீ-ஷர்ட்டும் ஜீன்ஸ் பேன்ட்டும் மழமழவென்ற முகமுமாக கலக்கலாக இருப்பார். 'ஃபாதர், ஃபாதன்ரிடெ ஃபாதரும் ஒரு ஃபாதராணோ?' என்று கேட்டாலும் கோபப்படாமல் புன்னகைப்பார். நல்ல கலா ரசிகர். அவருடைய அறையின் அமைப்பே அவருடைய ரசனையைப் பறைசாற்றும். ஸ்டுடியோ ஆரம்பிக்கப்பட்ட புதிதிலேயே தேடிச் சென்றவர்கள் நாங்கள் என்பதால் எங்களுக்கு எப்போதும் அங்கு தனி மயாதையும் கவனமும் உண்டு. இப்போது கேரளத்தில் மிகவும் பரபரப்பான ஸ்டுடியோவாக அது மாறிவிட்டது. அங்கேதான் எங்களுடைய 'வண்ணங்கள்' என்னும் தமிழ் கஸல் தொகுப்பின் இசைப்பதிவு நடந்தது.
பின்னர் சென்னை வந்து பாடகர்களின் டிராக்கும் பதிவு செய்யப்பட்டது. ஆனாலும் பல்வேறு நடைமுறைக் காரணங்களால் அதை விற்பனை செய்ய முடியவில்லை. மொத்தச் செலவு அந்த நாளிலேயே இரண்டு லட்சம் ரூபாய். அவ்வளவு செலவு செய்தும் ஏணியின் முதல் படிக்குக் கீழேதான் நிற்கவேண்டியிருந்தது.
அந்த தொகுப்பில் நான் எழுதிய 'உந்தன் கண்ணன்' என்ற பாடலை இங்கே குறிப்பிடவேண்டியிருக்கிறது. மீராவைப் பார்த்து கண்ணன் பாடுவதுபோல் அமைந்த பாடல் அது.
உந்தன் கண்ணன் சின்னக் கண்ணன் வந்தேனே மீரா
நீ இத்தனை நாள் செய்த தவம் கண்டேனே மீரா
உன் காதல் கண்டு ஆசை கொண்டு வந்தேனே மீரா
வெண்ணையைத் தின்று சலித்துப் போனேன்
சேலையைத் திருடி அலுத்துப் போனேன்
ஆநிரை மேய்த்திட நாட்டம் இல்லை
கோபிகைகள் வந்தும் மாற்றம் இல்லை
மாடுகள் மேயும் காட்டினில் நேற்று
காற்றினிலே வந்த கீதம் கேட்டேன்
உன் மீது காதல் கொண்டு வந்தேனே மீரா
சிலகாலம் கழித்து நானும் சுரேஷும் வேறொரு வேலையாக திருச்சூர் செல்லவேண்டியிருந்தது. ஒரு ப்ரொட்யூசரைப் பார்த்து கதை சொல்லவேண்டும். இரண்டு பேர் கையிலும் காசில்லை. எப்படியோ சமாளித்து பயணச் செலவுக்கு மட்டும் பணத்தை ஏற்பாடு செய்து கொண்டு புறப்பட்டோம். திருச்சூர் சென்று வேலையை முடித்தபோது கையிருப்பு இருநூறு ரூபாய்க்கும் குறைவானது. இதுவரை வந்துவிட்டோமே, ஃபாதரையும் பார்த்துவிட்டுப் போகலாம் என்று ஸ்டுடியோவுக்கு சென்றோம்.
ஸ்டுடியோவுக்கு முன்னால் ஒரு சிறிய ஓலைக்குடிசை இருக்கிறது. அது ஒரு ஹோட்டல். குடிசை என்றாலும் 'ஹோட்டல் சிஞ்சூஸ்' என்று ஆர்ப்பாட்டமாக போர்டெல்லாம் இருக்கும். ஸ்டுடியோவில் இருக்கும்போது அங்கிருந்துதான் எங்களுக்கு மதிய உணவு வரும். மத்தி பிரமாதமாக இருக்கும். அங்கு மாலை வேளையில் சூடாக கிடைக்கும் ஜிலேபியின் மீது சுரேஷுக்கு அளவு கடந்த பிரேமை இருந்தது. இன்று ஜிலேபிக்கெல்லாம் சான்ஸே இல்லை. ஊர் போய் சேரமுடியுமா என்று பார்ப்போம்.
எங்களைப் பார்த்ததும் ஃபாதரால் நம்பவே முடியவில்லை. உங்களை எப்படியாவது தொடர்பு கொள்ள வேண்டும் என்றிருந்தேன். நீங்கள் ஊரில் இல்லை என்று தொலைபேசியில் தெவித்தார்கள். இங்கே நீங்கள் வந்தது உண்மையிலேயே ஆச்சர்யம்தான் என்றார். (அப்போது அலைபேசி வசதிகள் கிடையாது.) உள்ளே அழைத்துச் சென்றார். ஒரு ரெக்கார்டிங் நடந்துகொண்டிருந்தது. ஒரு கிறிஸ்துவ பக்திப் பாடல் தொகுப்பு. அதன் தயாரிப்பாளரும் இசையமைப்பாளரும் மிக்ஸிங் அறையில் இருந்தார்கள். அவர்களைப் பார்த்து இவராணு மற்றே பார்ட்டி என்றார். தயாரிப்பாளர் வந்து எங்களின் கையைப் பிடித்துக் கொண்டார்.
அந்த பக்திப் பாடல் தொகுப்பில் மொத்தம் பதிமூன்று பாடல்கள். ஒவ்வொரு பாடலுக்கும் தனி இசையமைப்பானர்; தனி பாடலாசியர்; தனி பாடகர். கடைசிப் பாடலின் பதிவு அன்று நடந்துகொண்டிருக்கிறது. அந்த நேரத்தில்தான் தயாரிப்பாளர் ஃபாதரின் அறையில் இந்த 'உந்தன் கண்ணன்' பாடலைக் கேட்டிருக்கிறார். அதன் மெட்டு அவரை மிகவும் ஈர்த்துவிட்டது. எப்படியாவது இந்த மெட்டு தனக்கு வேண்டும் என்று ஆசை அவருக்கு. இந்த தொகுப்பில் பதினாலாவது பாடலாக அதை சேர்த்துவிட வேண்டும் என்று இரண்டு கால்களிலும் நின்றுகொண்டிருக்கிறார். சரியாக நாங்களும் போய் சேர்ந்துவிட்டோம்.
நாங்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம். மாதவன் சார் மனதில் வந்து முறைத்துவிட்டுப் போனார். சுரேஷின் ஒரு கண்ணில் எம்சி பிராந்தியும் மறு கண்ணில் சிஞ்சூஸ் ஜிலேபியும் ஒளிர்வது அப்பட்டமாகத் தெந்தது. நான் தயாரிப்பாளரிடம் 'இந்த மெட்டில் கிறிஸ்துவப் பாடல் சரியாக வராதே... என்டே ஈசோ நின்னே ஞங்ஙள் ஆராதிக்குன்னு என்று எழுதினால் நன்றாகவா இருக்கும்?' என்றேன். அவர் கண்கள் பிரகாசமடைந்தன. 'நன்னாயிட்டுண்டல்லோ? அல்லே ஃபாதர்.' என்று கேட்டார். ஃபாதரும் தலையாட்டினார். 'அடுத்த வரிகளும் இதேபோலப் பறயாமோ? என்றார். 'நின் புண்ய நாமம் சொல்லிச் சொல்லி ஆராதிக்குன்னு; நின் பாஹ்ய ரூபம் கண்டு ஞங்ஙள் ஆராதிக்குன்னு' என்றேன். பதினாலாவது பாடலாசியரும் கிடைத்துவிட்டார்.
அந்த வறுமையில் எங்களுக்கு கிடைத்த மூவாயிரம் உருப்பிகைகளுடன் திருச்சூர் பஸ்நிலையம் அருகே பாரில் மாதவன் சார் எங்கள் நிலைமையைப் புரிந்துகொள்வார் என்று சமாதானப்படுத்திக்கொண்டு ஜிலேபியைக் கடித்துக் கொண்டு மது அருந்தினோம்.
Sunday, December 7, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment