Sunday, December 7, 2008

மலையாளக் கரையோரம் 2 - யோத்தி மாசி!

ஆங்கிலத்தில் ஸ்பூனரிசம் (Spoonerism) என்றொன்றுண்டு. வார்த்தைகளுக்கிடையே நாக்குழறி வேறு வார்த்தைகளாக வெளிப்படுதல். வில்லியம் ஆர்ச்சிபால்ட் ஸ்பூனர் (1844-1930) என்பவருக்கு இது ஒரு வியாதியாகவே இருந்திருக்கிறது. ஆனால் அவருக்குப் பிறகு பெரும்பாலும் இது ஒரு வார்த்தை விளையாட்டாகவே வழக்கத்திலிருக்கிறது
.
ஒரு உதாரணம்: you have very mad banners.
இதன் மூல வாக்கியம்: you have very bad manners.
இன்னொன்று: bedding wells அதாவது wedding bells

இப்படி சாதாரண வாக்கியங்களில் ஆரம்பித்து பெரும்பாலும் 'நல்ல' வாக்கியங்களாக மாறிவிடும் இந்த வார்த்தை விளையாட்டு. உதாரணத்துக்கு இரண்டு:
1. Have you seen her sick duck?
2. She showed me her tool kits.

தமிழில் இப்படியொரு வார்த்தை விளையாட்டை நான் அறிந்ததில்லை. ஆனால் மலையாளத்தில் இது ஒரு மாபெரும் 'இயக்க'மாகவே இருக்கிறது என்று சொல்லலாம்; 'சொறிச்சு மல்லல்' என்பது மலையாளிக்கு என்றைக்கும் 'இஷ்டப்பட்ட ஒரு வினோதம்' ஆகவே இருக்கிறது. 'மறிச்சு சொல்லல்' (மாற்றிச் சொல்லுதல்) என்பதை மாற்றிப் போட்ட பிரயோகம் இது. இளைஞர்கள் முதியவர்கள் என்றில்லாமல் யாரிடமிருந்து வேண்டுமானாலும் ஒரு சொறிச்சு மல்லல் பிரயோகத்தை நீங்கள் எந்தக் கணமும் எதிர்பார்க்கலாம். அதை நீங்கள் சொறிச்சு மல்லிப் பார்ப்பதற்குள் அவர் இடத்தைக் காலி செய்திருப்பார். அந்தப் பிரயோகத்தை அதிர்ச்சியுடன் வாயிலிட்டு மென்று வெளியே துப்புவதற்குள் நீங்கள் படாத பாடுபடவேண்டியிருக்கும்
.
அந்த நாட்களில் எங்கள் தறவாட்டு இல்லத்தில் ஒரு காரணவர் இருந்தார். முற்றத்திலோ அஞ்சாம்புரையிலோ குளக்கரையிலோ எங்கிருந்தாலும் சரி, அவரைச் சுற்றி எப்போதும் ஒரு இளைஞர் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். அந்தப் பக்கம் செல்ல பெண்கள் தயங்குவதுபோல் நடிக்கவாவது செய்வார்கள். தொந்தியைத் தடவியபடி அல்லது பூணூலால் முதுகைச் சொறிந்தபடி அல்லது மூக்குப்பொடியை உறிஞ்சி தும்மியபடி என்று பல சேஷ்டைகளுடன் அவர் நல்ல வார்த்தைகள்தான் பேசிக்கொண்டிருப்பார். அதற்கு எதற்கு இந்த இளைஞர்கள் இப்படி விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள் என்று - தமிழ்நாட்டிலிருந்து எப்போதாவது அங்கு செல்லும் - எனக்குப் புரியவே புரியாது; எரிச்சல்தான் வரும். சில பேரிடம் கேட்டபோது சிரித்தபடியே போய்விட்டார்கள்.
ஒருநாள் என் முறைப்பெண்ணிடம் இதைப் பற்றி ரகசியமாகக் கேட்டேன்
: ஸ்ரீக்குட்டீ, இந்த கேசவப்பன் சொல்வதற்கெல்லாம் எதற்காக இவர்கள் இப்படி கேணத்தனமாகச் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று. அவள் ஆர்வத்துடன், இன்று என்ன சொன்னார் என்று கேட்டாள். 'வாதி குடிச்சிட்டுண்டோ?' என்று கேட்டார்; எல்லோரும் சிரிக்கத் துவங்கிவிட்டார்கள் என்றேன். அவள் ஒரு நொடி யோசித்து முகத்தை அஷ்டகோணலாக்கி 'அய்யே...' என்றபடி ஓடிவிட்டாள்.
பலநாட்கள் அவளிடம் கெஞ்சிய பிறகுதான் இந்த 'பாவம் பாண்டி'க்கு சொறிச்சு மல்லல் குறித்து சொல்லிக் கொடுத்தாள்:
முறைப்பையனுக்குக் கெட்ட வார்த்தை சொல்லிக்கொடுக்கும் குறும்பு கொப்பளிக்கும் ஆர்வத்துடனும் நாணத்துடனும். இரண்டு வார்த்தைகளில் முதல் எழுத்தை மாற்றிப் போடவேண்டுமாம்; நெடிலையும் குறிலையும் மாற்றிவிட வேண்டுமாம்.
தொடர்ந்து ரகசியமாய் என் காதில் 'மதமேதாயாலும் குணமுண்டாயால் மதி' என்று கூறிவிட்டு ஓடிவிட்டாள்.
அதிலிருந்து யார் எது சொன்னாலும் எது கேட்டாலும் ஒரு நிமிடத்துக்கு என்னிடமிருந்து பதில் வருவதில்லை. ஒரு நிமிடம் யோசித்து அதில் சொறிச்சு மல்லல் எதுவும் இல்லை என்று உறுதியானபிறகுதான் பேசவே துவங்குவேன். இப்போதும் இந்த வியாதி தொடர்கிறதோ என்னவோ?
அன்று நான் போயிருந்தது ஒரு திருமணத்துக்காக. அடுத்த நாள் திருமண விருந்துப் பந்தி. நாலைந்து இலைகள் தள்ளி காரணவர் உட்கார்ந்திருந்தார்.
எதிர்ப் பந்தியில் பெண்கள். எரிசேரி, புளிசேரி, காளன், பப்படம், கூச்சல்... பரபரப்பு கூடிக்கொண்டே இருந்தது. திடீரென்று காரணவர் சத்தமாகக் கத்தினார்: 'உண்ணீ... சாம்பாருண்டோ ?'... திடீரென நிசப்தம் நிலவியது. ஒரு நொடி விட்டு 'சொறிச்சு மல்லல்லே...' என்றார். சில நொடிகள் கழிந்து ஆண்கள் வரிசையில் அட்டகாசச் சிரிப்பு; எதிர்ப்புறமிருந்து
'அய்யே...' என்ற கூக்குரல்கள்.
ரொம்ப யோத்தி மாசிக்கிறாய்ங்களோ என்று நினைத்துக்கொண்டேன்.

3 comments:

பிரகாஷ் said...

அன்புள்ள ஸ்ரீபதி, ஏன் மலையாளக் கரையோரம் தொடரை தொடர்வதில்லை? மிக நன்றாக இருந்தது. விரும்பி வாசித்துக் கொண்டிருந்தேன். எதிர்பார்ப்புடன்...

ISR Selvakumar said...

ஹா..ஹா..
தரமான புன்னகைக்க வைக்கும் கட்டுரை.
நேற்றுதான் நான் மறச்சு சொல்லல் பற்றி கேள்விப்பட்டேன்.
இன்று வல்லிய உதாரணங்களுடன் படித்துவிட்டேன்.

ramankutty said...

You have to watch Malayalam version of big brother...